கோடையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு 1 கிலோ 50 ரூபாயாக விற்பனை
கோடையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு 1 கிலோ 50 ரூபாயாக விற்பனை
ADDED : மே 12, 2026 11:33 PM
கோலார்: ஏ.பி.எம்.சி. என்ற வேளாண்மை விளைபொருள் கோலார் சந்தைக்கு 10 சதவீத தக்காளி மட்டுமே வருகிறது. 90 சதவீதம் சித்ரதுர்கா, துமகூரு உட்பட பல இடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தக்காளி வரத்து குறைந்திருப்பதால் விலை அதிகரித்துள்ளது.
கோலார் மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது. ஏராளமான தக்காளி செடிகள் காய்ந்து விட்டன. தக்காளி உற்பத்தி குறைந்து விட்டது. இதனால், சில்லறை வியாபாரமாக, 1 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கும், 15 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி விலை 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மார்ச், ஏப்ரலில் நிலவிய அதிக வெப்பம், தக்காளி நடவு செய்வது ஒரு மாதம் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக தக்காளி அறுவடை செய்யும் காலம் ஜூன் மாதமே துவங்கி விடும். ஆனால், இம்முறை ஜூலையில் இருந்து தான் ஆரம்பமாகும்.
கோலார் ஏ.பி.எம்.சி.,யில் இருந்து தான் அதிகளவு கேரளா, தமிழகம், ஆந்திரா மாநிலங்களுக்கு தக்காளி அதிகளவு சப்ளை செய்யப்படுவது வழக்கம். இங்கிருந்து நாள்தோறும் 10 டன் தக்காளி விற்பனை செய்யப் படும். வெளிமாநிலங்களுக்கும், பிற நகரங்களுக்கும் கொண்டு செல்ல 1,500 வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
தற்போது தக்காளி உற்பத்தி குறைந்துள்ள நிலையில், தேவை அதிகமாக உள்ளது.
அறுவடை தாமதம்
கோலார் ஏ.பி.எம்.சி., சந்தைக்கு, 15 நாட்களாகவே தக்காளி வரத்து மிகவும் குறைந்து விட்டது. வெப்பத்தின் தாக்கம், தக்காளி உற்பத்தியை பெரிதும் பாதித்தது. விவசாயிகள் தக்காளி நடவு செய்வதை தாமதப்படுத்தி விட்டதால் அறுவடைக் காலமும் தாமதமாகிறது.
- கிரண், செயலர், ஏ.பி.எம்.சி., கோலார்
விலை அதிகரிப்பு
கோடை வெப்பத்தால் தக்காளி உற்பத்தியும், தரமான தக்காளியும் பாதித்தது. கோலார் ஏ.பி.எம்.சி., சந்தைக்கு கோலார் மாவட்டத்தில் இருந்து 8 முதல் 10 சதவீதம் மட்டுமே தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விலை அதிகரித்து உள்ளது.
மகேஷ், விற்பனையாளர், கோலார்
