/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
தாவணகெரேவில் பார்க்க வேண்டிய டாப் 5 இடங்கள்
/
தாவணகெரேவில் பார்க்க வேண்டிய டாப் 5 இடங்கள்
ADDED : ஜன 15, 2026 07:08 AM

பொதுவாக மூன்று, நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்தால், குடும்பத்துடன், நண்பர்களுடன் செல்வது பலருக்கும் பிடித்தமான விஷயமாகும். இம்முறை பொங்கல் பண்டிகை வார இறுதியில் வந்துள்ளது. தொடர்ச்சியாக விடுமுறைகள் கிடைத்துள்ளன. எனவே சுற்றுலா செல்ல பிளான் போடுகின்றனர்.
கர்நாடகாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும், சுற்றுலா தலங்கள் உள்ளன. அதே போன்று தாவணகெரேவிலும், சூப்பர் சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணியரை ஈர்க்கின்றன. இவற்றில் டாப் 5 இடங்களின் பட்டியலை பார்ப்போமா.
சூளேகெரே ஏரி தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின், சூளேகெரே கிராமத்தில் சாந்திசாகரா ஏரி அமைந்துள்ளது. இது ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி என்ற பெருமை பெற்றதாகும்.
இந்த ஏரி 11ம் நுாற்றாண்டில் அமைக்கப்பட்டது. மன்னர் விக்ரம ராயனின் மகள் இளவரசி சாந்தலாதேவியால் உருவான ஏரியாகும்.
குடிமக்கள் தண்ணீர் பிரச்னையால் பரிதவிப்பதை காண சகிக்காமல், இளவரசி சாந்தலாதேவி, ஏரியை வெட்டினார். ஆரம்பத்தில் சிறிதாக இருந்த ஏரி, நாளடைவில் விரிவடைந்து ராஜ்யத்தை மூழ்கடித்தது. இந்த கோபத்தில் மன்னர் விக்ரம ராயன் தன் மகள் சாந்தலாதேவியை, வேசி என திட்டினார்.
இந்த காரணத்தாலும், வேசிகள் அதிகம் வசித்த இடத்தில் ஏரி அமைக்கப்பட்டதாலும், ஏரிக்கு, 'சூளேகெரே' என பெயர் ஏற்பட்டது. சூளே என்றால் கன்னட மொழியில் வேசி என, அர்த்தமாகும்.
இது இப்போதும் 1000 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குகிறது. 6,000 ஏக்கர் விவசாய நிலத்துக்கு நீர்ப்பாசன வசதி செய்கிறது.
இரண்டு மலைகளுக்கு நடுவில், இயற்கை எழில் மிகுந்த இடத்தில், ஏரி அமைந்துள்ளதால் சுற்றுலா பயணியரை, தன் வசம் சுண்டி இழுக்கிறது. சூளேகெரே ஏரி 6,550 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஒரு காலத்தில் இது சொர்க்கவதி பட்டணமாக இருந்ததாம்.
கிளாஸ் ஹவுஸ் தேசிய அளவில் அடையாளம் காணப்பட்ட சுற்றுலா தலங்களில், தாவணகெரேவின் கண்ணாடி மாளிகையும் ஒன்றாகும். தாவணகெரே நகரின், ஹரிஹரா தேசிய நெடுஞ்சாலையில் கண்ணாடி மாளிகை உள்ளது. இதை காண தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இங்கு புதிய உலகமே உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளின் செடிகள், கண்ணாடி மாளிகையை கண்டால், மனம் மகிழ்ச்சி அடையும். இதை காண அதிகம் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. தாவணகெரே நகரில் இருந்து, வெறும் ஏழெட்டு கி.மீ., தொலைவில் கண்ணாடி மாளிகை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 4ல், ஹரிஹராவில் இருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு செல்ல அரசு, தனியார் பஸ் வசதி உள்ளது.
துர்காம்பிகா கோவில் தாவணகெரே நகரில் அமைந்துள்ளது துர்காம்பிகை கோவில். இக்கோவிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால், வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
முன்னாள் முதல்வர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என, யார் தாவணகெரேவுக்கு வந்தாலும், துர்காம்பிகையை தரிசனம் செய்ய மறப்பது இல்லை. தரிசிப்பதுடன் சிறப்பு பூஜைகளும் செய்கின்றனர். துர்காம்பிகை கோவிலை சுற்றிலும், பல்வேறு கோவில்கள் உள்ளன.
வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தாவணகெரே நகரின் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கீழ்ப்பாலம் வழியாக வந்தால், மன்டிபேட்டை அடையலாம். இங்கிருந்து சிவப்பா நாயக் சதுக்கம் வரை சென்று, அங்கிருந்து சிறிது தொலைவு நடந்து சென்றால் துர்காம்பிகை கோவிலை அடையலா ம்.
கொண்டஜ்ஜி ஏரி தாவணகெரே நகரில் உள்ள கொண்டஜ்ஜி ஏரி, மிகவும் அழகானது. மிகவும் பெரிய ஏரிகளில், இதுவும் ஒன்றாகும். சில மாதங்களாக ஏரி நிரம்பியுள்ளதால், தாவணகெரேவின், கொண்டஜ்ஜி கிராமத்தில் இந்த ஏரி உள்ளது. மிகவும் விசாலமான ஏரியாகும்.
அமைதியான சூழ்நிலையில் உள்ள கொண்டஜ்ஜி ஏரிக்கரையில், அமர்ந்து ஓய்வெடுக்கவும், இயற்கை காட்சிகளை ரசிக்கவும் வார இறுதி நாட்களில், அதிகமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
தேவரபெளகெரே அணை தாவணகெரேவில், சுற்றுலா பயணியர் விரும்பும் சுற்றுலா தலங்களில், தேவரபெளகெரே அணையும் ஒன்றாகும். சுற்றிலும் தோட்டங்கள், மலைகள் இயற்கை காட்சிகளுக்கு நடுவில், அணை அமைந்துள்ளது. இதன் அழகை காண, பெருமளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் அழகை காண, இரண்டு கண்கள் போதாது. இதை ரசிக்க இளைஞர்கள், மாணவ - மாணவியர் அதிகம் வருகின்றனர்.
தாவணகெரேவின், சாமனுாரு பாலத்தின் கீழே இருந்து, ஆஞ்சநேயர் கோவில் உள்ள சாலையில், நேராக வந்தால் தேவரபெளகெரே அணையை அடையலாம். பாலத்தின் மீதிருந்து, அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் அழகை காணலாம்.
பொங்கல் விடுமுறைக்கு சுற்றுலா செல்ல,திட்டமிட்டிருந்தால், தாவணகெரேவின் இந்த ஐந்து சுற்றுலா தலங்களையும், பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்
- நமது நிருபர் - .

