/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விதான் சவுதாவை சுற்றி பார்க்க அனுமதி கட்டணம் வசூலிக்க சுற்றுலா துறைக்கு உத்தரவு
/
விதான் சவுதாவை சுற்றி பார்க்க அனுமதி கட்டணம் வசூலிக்க சுற்றுலா துறைக்கு உத்தரவு
விதான் சவுதாவை சுற்றி பார்க்க அனுமதி கட்டணம் வசூலிக்க சுற்றுலா துறைக்கு உத்தரவு
விதான் சவுதாவை சுற்றி பார்க்க அனுமதி கட்டணம் வசூலிக்க சுற்றுலா துறைக்கு உத்தரவு
ADDED : ஏப் 09, 2025 07:09 AM

பெங்களூரு: தேசிய விடுமுறை நாட்களில் பொது மக்கள் விதான் சவுதாவை சுற்றிப் பார்க்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதே வேளையில், சுற்றுலா பயணிரிடம் கட்டணம் வசூலிக்க, சுற்றுலா துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் தலைமை செயலகமான விதான் சவுதாவை சுற்றுலா தலமாக மாற்ற, வாரத்தில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விதான் சவுதாவில் மின்னொளி அலங்காரம் செய்யப்படும் என சபாநாயகர் காதர் தெரிவித்திருந்தார். இதன்படி, இரண்டு நாட்களுக்கு முன்பு, மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டது. இதை பார்க்க நகரின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர்.
அதுபோன்று, புதுடில்லியில் ராஷ்டிரபதி பவன், பார்லிமென்ட் பகுதியை சுற்றுலா பயணியர் சுற்றிப் பார்ப்பது போன்று, விதான் சவுதாவையும் சுற்றிப் பார்க்க வாய்ப்பளிக்கப்படும் என, சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
* ஆன்லைன்
கர்நாடக அரசும், விதான் சவுதாவை சுற்றிப் பார்க்க அனுமதி அளித்துள்ளது. அதேவேளையில், சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணியரிடம், ஆன்லைன் வாயிலாக கட்டணம் வசூலிக்க, சுற்றுலா துறைக்கு உத்தரவிட்டுள்ளது. விதான் சவுதாவை பார்வையிட, சுற்றுலா வழிகாட்டிகளும் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
* பொது விடுமுறை நாட்களில், காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை சுற்றுலா பயணியர் வரலாம்
* சுற்றிப் பார்க்க வருவோர், 30 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்படுவர். ஒவ்வொரு குழுவினரையும், சுற்றுலா துறையின் அதிகாரிகள் கண்காணிப்பர். சுற்றுலா துறையின் துணை இயக்குநர், பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்
* ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது
* ஆன்லைனில் டிக்கெட் கட்டணம் செலுத்திய பின்னரே, சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவர். இந்த கட்டணத்தில் குறிப்பிட்ட தொகை, சுற்றுலா துறைக்கு செல்லும்
* துணை போலீஸ் கமிஷனர், விதான் சவுதா பாதுகாப்பு அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை சுற்றுலா பயணியர் பின்பற்ற வேண்டும்
* விதான் சவுதா கட்டடம், பூங்காக்கள், தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தாமல் பார்வையிட வேண்டும். இது தொடர்பாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும்
* சுகாதார துறை சார்பில் விதான் சவுதாவில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் தயாராக இருக்கும்
* தீயணைப்பு துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பணியில் அமர்த்தப்பட்டிருப்பர்
* விதான் சவுதா வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க, சுற்றுலா பயணியர் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
***

