/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுற்றுலா பயணியருக்கு குதுரேமுக்கில் தடை நீக்கம்
/
சுற்றுலா பயணியருக்கு குதுரேமுக்கில் தடை நீக்கம்
ADDED : ஏப் 28, 2025 06:56 AM

சிக்கமகளூரு: பிரசித்தி பெற்ற குதுரேமுக் வனப்பகுதியின் பல்வேறு மலையேற்ற பாதைகளில் சுற்றுலா பயணியர், மலையேற்ற ஆர்வலர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு, மே 1ம் தேதி முதல் நீக்கப்படுகிறது.
சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா தாலுகாவில் உள்ள குதுரேமுக் வனப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்றது.
உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
அடர்ந்த வனம், மலைப்பகுதிகள் சூழ்ந்துள்ளதால், மலையேற்ற சாதனையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும்.
இம்முறை கோடைக்காலம் துவங்கும் முன்பே, வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால், வனப்பகுதிகள் வறண்டு, ஆங்காங்கே தீப்பிடிக்கிறது.
இத்தகைய நேரத்தில் சுற்றுலா பயணியர் நடமாட்டம் இருந்தால், அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும். ஒருவேளை காட்டுத்தீ ஏற்பட்டால், தீயை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு கஷ்டமாக இருக்கும்.
இதை மனதில் கொண்டு, குதுரேமுக் வனப்பகுதிக்கு உட்பட்ட மலையேற்ற பகுதிகளான நேத்ராவதி மலை, நரசிம்மர் மலை, ஹிட்லுமனே நீர் வீழ்ச்சி, கொடசாத்ரி பகுதிகளில் சுற்றுலா பயணியருக்கும், மலையேற்றத்துக்கும் வனத்துறை தடை விதித்திருந்தது.
சில நாட்களாக வனப்பகுதிகளில் பெருமளவில் மழை பெய்துள்ளது. பசுமை காணப்படுகிறது.
எனவே மே 1ம் தேதி முதல் மலையேற்றத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மலையேற்றம் செல்ல விரும்புவோர், aranyavihara.karnataka.gov.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.