சக்ரேபைலு யானைகள் முகாமில் சுற்றுலா பயணியருக்கு தடை
சக்ரேபைலு யானைகள் முகாமில் சுற்றுலா பயணியருக்கு தடை
ADDED : மே 22, 2026 05:17 AM

ஷிவமொக்கா: குடகு துபாரே யானைகள் முகாம் சம்பவத்தை தொடர்ந்து, சக்ரேபைலு யானைகள் முகாமும் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
குடகு மாவட்டம் துபாரே யானைகள் முகாமில் இரு யானைகள் இடையே ஏற்பட்ட மோதலில், சென்னை பெண் சுற்றுலா பயணி ஜின்சு, 33, உயிரிழந்தார்.
இதையடுத்து மாநிலம் முழுதும் வனப்பகுதியில் திறந்தவெளி ஜீப்களில் சபாரி செல்ல தடை உட்பட பல புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், வனத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:
ஷிவமொக்கா மாவட்டம் சக்ரேபைலு யானைகள் முகாமில், 19 ஆண், ஐந்து பெண் என, 24 யானைகள் உள்ளன. இந்த முகாமிற்கும் உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் அதிகளவில் வருகின்றனர்.
இங்கும் ஆற்றங்கரையில் குளிக்கும் யானைகளை, 50 மீட்டர் தொலைவில் இருந்து பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனாலும், குடகு சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை கருதி நாளை முதல் சக்ரேபைலு யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணியர் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
ஆனால், கோடை விடுமுறை என்பதால் நேற்று சுற்றுலா பயணியர் அதிகளவில் முகாமிற்கு வந்திருந்ததால், நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. இன்று முதல் சில நாட்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
