/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹம்பியில் வசதிகள் இல்லை; சுற்றுலா பயணியர் வருத்தம்
/
ஹம்பியில் வசதிகள் இல்லை; சுற்றுலா பயணியர் வருத்தம்
ஹம்பியில் வசதிகள் இல்லை; சுற்றுலா பயணியர் வருத்தம்
ஹம்பியில் வசதிகள் இல்லை; சுற்றுலா பயணியர் வருத்தம்
ADDED : ஜன 01, 2026 06:54 AM

விஜயநகரா: விஜயநகரா மாவட்டம் ஹொஸ்பேட் தாலுகாவில் உள்ள ஹம்பி, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம். இங்கு புராதன கோவில்களும் உள்ளன. யுனஸ்கோ அங்கீகாரமும் பெற்றுள்ளது. தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் விடுமுறை இருந்ததாலும், கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் பள்ளி, கல்லுாரிகள் கல்வி சுற்றுலாவுக்காக மாணவர்களை ஹம்பிக்கு அழைத்து வந்துள்ளன. இதனால் ஒரே வாரத்தில் ஹம்பிக்கு வந்த சுற்றுலா பயணியர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை எட்டியது.
சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பதால், இங்குள்ள வியாபாரிகள், கைடுகள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட, பலரும் லாபமடைகின்றனர்.
ஆனால், சுற்றுலா பயணியருக்கு, போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர், சில நாட்கள் தங்கி ஹம்பியை சுற்றிப்பார்க்க விரும்புகின்றனர்.
ஆனாலும், தங்குவதற்கு சரியான விடுதிகள், ஹோட்டல்கள் இல்லை. இருக்கும் சில விடுதிகளில் அறைகள் எப்போதும் நிரம்பியுள்ளன. புதிதாக வருவோர், அறைகள் கிடைக்காமல் ஹம்பியை சரியாக பார்க்க முடியாமல் திரும்பி செல்கின்றனர்.
வரும் நாட்களில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.
இதை மனதில் கொண்டு, அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும், தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என, சுற்றுலா வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

