/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புலிகள் தாக்குதலில் தப்பிய டிராக்டர் ஓட்டுநர், சிறுவன்
/
புலிகள் தாக்குதலில் தப்பிய டிராக்டர் ஓட்டுநர், சிறுவன்
புலிகள் தாக்குதலில் தப்பிய டிராக்டர் ஓட்டுநர், சிறுவன்
புலிகள் தாக்குதலில் தப்பிய டிராக்டர் ஓட்டுநர், சிறுவன்
ADDED : டிச 25, 2025 06:40 AM

மைசூரு: மைசூரில் இரு புலிகளின் தாக்குதலில் இருந்து டிராக்டர் ஓட்டுநரும், கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்த சிறுவனும் அதிர்ஷ்டசவமாக உயிர் தப்பினர்.
மைசூரு மாவட்டம், ஹூன்சூரின் ஷெட்டிஹள்ளி கிராமத்தில், நாகரஹொளே தேசிய பூங்கா அருகில் உள்ள வனத்தில் ஜமீர் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் டிராக்டர் மூலம் வர்ஷித் என்பவர் உழுது கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த இரண்டு புலிகளில் ஒன்று, வர்ஷித்தை நோக்கி வந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வர்ஷித், கூச்சலிட்டு புலியை விரட்ட முற்பட்டார். ஆனால் புலி இவரை நோக்கி வந்தது. டிராக்டரை புலி அருகில் அங்குமிங்குமாக ஓட்டி விரட்டியதால், புலி மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியது.
சிறிது தொலைவில் அஸ்லாம் என்ற சிறுவன் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தார். மற்றொரு புலி, தன்னை நோக்கி வருவதை பார்த்த சிறுவன், அங்கிருந்து தப்பியோடி, பம்ப் செட் அறையில் தஞ்சம் புகுந்து தப்பினார். பின், அங்கு மேய்ந்து கொண்டிருந்த காளையின் கழுத்தை கடித்து காயப்படுத்திய புலி, பின் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.
தகவல் அறிந்து தாமதமாக அங்கு வந்த வனத்துறையினரிடம், கிராம மக்களும், விவசாயிகளும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். காயமடைந்த காளை மாட்டை வனத்துறையினர் வாகனத்தில் கட்டி, புதிய கால்நடை வாங்கித் தரும்படி வற்புறுத்தினர். அங்கு வந்த வன அதிகாரி சுப்ரமண்யா, அவர்களை சமாதானப்படுத்தினார்.
டிராக்டர் ஓட்டிய வர்ஷித் கூறுகையில், ''புலி என்னை நோக்கி வருவதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நான், டிராக்டரை அங்கும், இங்குமாக ஓட்டியும் என்னை நெருங்கியது. பின் டிராக்டரை அதன் அருகில் ஓட்டி சென்று அதனை மிரட்டி, வனப்பகுதிக்குள் விரட்டியதால், உயிர் பிழைத்தேன்,'' என்றார்.
வன அதிகாரி லட்சுமிகாந்த் கூறுகையில், ''இரண்டு புலிகளை பார்த்ததாக வர்ஷித் கூறி உள்ளார். இது புலிகளின் இனவிருத்தி காலம். வந்தது ஆண், பெண் புலியாக இருக்கலாம். இப்பகுதியில் நான்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. புலியை பிடிக்கும் பணி விரைவில் துவக்கப்படும்,'' என்றார்.

