sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சோகம்! ஆர்.சி.பி., அணியை வரவேற்க வந்த 11 பேர் பலி: பெங்களூரில் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் நெரிசல்

/

சோகம்! ஆர்.சி.பி., அணியை வரவேற்க வந்த 11 பேர் பலி: பெங்களூரில் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் நெரிசல்

சோகம்! ஆர்.சி.பி., அணியை வரவேற்க வந்த 11 பேர் பலி: பெங்களூரில் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் நெரிசல்

சோகம்! ஆர்.சி.பி., அணியை வரவேற்க வந்த 11 பேர் பலி: பெங்களூரில் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தில் நெரிசல்


ADDED : ஜூன் 05, 2025 04:51 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ஐ.பி.எல்., கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வரவேற்க, சின்னசாமி மைதானம் முன் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் திரண்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் நெரிசலில் சிக்கி, ஒரு பெண் உட்பட 11 பேர் பலியாகினர். முறையான ஏற்பாடுகளை செய்யாததால் இந்த துயரம் நடந்ததாகவும், இதற்கு மாநில அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி, நேற்று முன்தினம் இரவு குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் நடந்தது. பஞ்சாப் அணியை வீழ்த்தி முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஐ.பி.எல்., கிரிக்கெட் துவங்கி 17 ஆண்டுகளுக்கு பின், 18வது ஆண்டின் கோப்பையை பெங்களூரு கைப்பற்றியதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

நேற்று முன்தினம் இரவு முழுதும், நகரில் கொண்டாட்டங்கள் அரங்கேறியன. பட்டாசு வெடித்தும், பைக்கில் ஆர்.சி.பி., கொடியுடன் சென்றும் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் பெங்களூரு அணிக்கு சின்னசாமி மைதானத்தில் நேற்று மாலை 6:00 மணிக்கு, பாராட்டு விழா நடத்தப்படும் என, கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.

முன்னதாக விதான் சவுதாவில் பெங்களூரு அணியின் கிரிக்கெட் வீரர்களை கவுரவிக்க அரசு ஏற்பாடு செய்திருந்தது.

விராத் கோலி, ரஜத் படிதர் உள்ளிட்ட வீரர்களையும், வெற்றிக் கோப்பையையும் பார்க்க, நேற்று மதியம் முதல், நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் விதான் சவுதா முன் ரசிகர்கள் திரண்டனர்.

இதனால் அந்த சாலையில் எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம், ஆர்.சி.பி.,யின் கொடி தான் பறந்தது. ஒரே இடத்தில் 50,000க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் கால்களை கூட நகர்த்த முடியாத அளவுக்கு, கூட்டம் அதிகமாக இருந்தது.

விதான் சவுதாவில் இருந்து சிறிது துாரத்தில் தான், சின்னசாமி கிரிக்கெட் மைதானமும் இருப்பதால், ரசிகர்கள் அங்கும் படையெடுத்துச் செல்ல துவங்கினர்.

பெங்களூரு அணிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் பங்கேற்க, பாஸ் பெற்றவர்கள் மட்டும் மைதானத்திற்குள் செல்ல முடியும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

ஆனால் பாஸ் வாங்காத ரசிகர்களும் மைதானத்திற்குள் நுழைய முயன்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

மாலை 5:00 மணியளவில் மைதானத்தின் 5, 6வது நுழைவுவாயில் வழியாக, தங்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூச்சல் எழுப்பத் துவங்கினர்.

சிலர் 6வது நுழைவுவாயில் கேட் மீது ஏறி மைதானத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது கேட்டில் இருந்து தவறி விழுந்ததில் ரசிகர் ஒருவரின் கால் எலும்பு முறிந்தது.

* போலீஸ் தடியடி

இதுபோல 18வது நுழைவுவாயில் பகுதியிலும், மைதானத்திற்குள் செல்ல ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் ரசிகர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இதற்கிடையில் 12வது நுழைவுவாயில் பகுதியில் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்ததால், வேறு வழியின்றி நுழைவுவாயில் கேட்டை, மைதான ஊழியர்கள் திறந்து விட்டனர்.

முண்டியடித்துக் கொண்டு ரசிகர்கள் உள்ளே சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்தனர். அவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. இதற்குள் கீழே விழுந்த 50க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அவர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார், மைதான ஊழியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ்களில் ஏற்றி, சிவாஜிநகர் பவுரிங், ஒயிட்பீல்டு வைதேகி, மணிப்பால் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவ்யான்ஷி, 13, தியா, 26, ஷ்ரவன், 31, அடையாளம் தெரியாத இரண்டு இளம்பெண்கள், ஒரு வாலிபர் என, 6 பேர் உயிரிழந்தனர்.

மணிப்பால் மருத்துவமனையில் சின்மயி, 19, என்பவரும், வைதேகி மருத்துவமனையில் பூமிக், 20, சஹானா, 19, ஒரு வாலிபர், 35 வயது ஆண் என, ஆகிய நான்கு பேரும் இறந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

* ரூ. 10 லட்சம்

பின், சித்தராமையா அளித்த பேட்டி:

பெங்களூரு அணியின் வெற்றி விழா நிகழ்ச்சிக்கு, நாங்கள் எதிர்பார்த்ததை விட கூட்டம் கூடிவிட்டது. விதான் சவுதா, மைதானம் முன் மூன்று லட்சம் பேர் கூடி விட்டனர். இந்த துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஆனால் இதை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறது.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் இளம்தலைமுறையினர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவ செலவை அரசு ஏற்கும். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பெங்களூரு கலெக்டர் விசாரிப்பார்.

மைதானத்தில் நடந்தது, அரசு நிகழ்ச்சி இல்லை. ஆனாலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி இருந்தோம். பாராட்டு விழா உடனடியாக நடத்தவில்லை என்றால், ஏன் நடத்தவில்லை என்று ஊடகத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். உடனடியாக நடத்தி அசம்பாவிதம் நடந்ததால் என்ன அவசரம் என்று கேட்கிறீர்கள்?

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஊடகத்தினர் கேட்ட சில கேள்விகளுக்கு, சித்தராமையா காட்டமாக பதில் அளித்தார். கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கும்போதே, நன்றி... நன்றி... நன்றி என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

தெளிவான தோல்வி!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சியான பா.ஜ.,வின் தலைவர்கள் அசோக், விஜேந்திரா உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.அப்போது எதிர்க்கட்சி தலைவர் அசோக் அளித்த பேட்டி:பெங்களூரு அணி ஐ.பி.எல்., பட்டத்தை வென்றதை கொண்டாடிய வேண்டிய நேரம், தற்போது துக்க நேரமாக மாறி உள்ளது. இதற்கு காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற நிர்வாகமே காரணம்.அரசு அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிர் போய் உள்ளது. சரியான திட்டமிடல் இல்லாமலும், போலீஸ் துறைக்கு போதிய நேரம் கொடுக்காமலும் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த நினைத்தது தான் இந்த துயரத்திற்கு காரணம்.சட்டம் - ஒழுங்கை பராமரிப்பில் மும்முரமாக இருந்த போலீசாருக்கு, உடனடியாக இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்குவது கடினம் என்பதை அறிந்திருக்க வேண்டும். இது அரசின் தெளிவான தோல்வி.ரசிகர்கள் எண்ணிக்கையை முன்பே மதிப்பிட அரசு தவறிவிட்டது. இந்த நிகழ்ச்சியை கொஞ்சம் நேரம் எடுத்து நடத்தி இருக்கலாம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us