ADDED : ஏப் 21, 2026 02:45 AM
பெங்களூரு: தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இன்று முதல் போராட்டத்தை துவக்கவுள்ளனர்.
கர்நாடக போக்குவரத்துக்கழக ஊழியர்கள், ஊதிய உயர்வு, பாக்கி ஊதிய தொகை வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட போது, கோரிக்கை களை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தது. ஆனால் முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே மீண்டும் போராட்டத்தில் ஈடுபட, போக்குவரத்துக்கழக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரின், சுதந்திர பூங்காவில், இன்று முதல் போராட்டத்தை துவக்கவுள்ளனர். இதில் கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., வடமேற்கு மற்றும் கல்யாண கர்நாடகா போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பங்கேற்பதால், பஸ் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என, அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனரு.
போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்க கூடாது. பங்கேற்றால் சஸ்பென்ட் செய்வதாக, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
ஆனால் எச்சரிக்கைக்கு பணியாத ஊழியர்கள், போராட்டம் நடத்தியே தீருவோம் என, பிடிவாதம் பிடிக்கின்றனர்.
எனவே பயணியருக்கு தொந்தரவு ஏற்படாமல், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து டிப்போக்களில் இருந்தும், கூடுதல் பஸ்களை நியமித்துள்ளது.
ஏழு சதவீதம் ஊதியத்தை உயர்த்த, அரசு சம்மதித்துள்ளது. ஆனால் 25 சதவீதம் ஊதிய உயர்வு கேட்டு, ஊழியர்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர்.
