/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆக., 5ல் வேலை நிறுத்தம்
/
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆக., 5ல் வேலை நிறுத்தம்
ADDED : ஜூலை 16, 2025 11:03 PM
பெங்களூரு: ''ஊதிய உயர்வு வழங்காதது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக., 5ம் தேதி முதல் நான்கு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்,'' என, போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுத் தலைவர் ஆனந்த் சுப்பாராவ் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவின் பி.எம்.டி.சி., - கே.எஸ்.ஆர்.டி.சி., - என்.டபிள்யூ.ஆர்.டி.சி., - கே.கே.ஆர்.டி.சி., ஆகிய நான்கு போக்குவரத்துக் கழகங்களில், 1.15 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறோம்.
ஊழியர்களுக்கு, 38 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அதிகாரிகளுடன் நான்கைந்து முறை பேச்சு நடத்தியும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜூலை 7ம் தேதி முதல்வர் சித்தராமையா, எங்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், 'ஒரு வாரத்திற்குள் மீண்டும் கூட்டம் நடத்தப்படும்' என்று கூறியிருந்தார். ஆனால், 8 நாட்கள் கடந்த பின்னரும் கூட்டம் நடத்தவில்லை.
எனவே, ஆக., 4ம் தேதி நள்ளிரவு முதல் எந்த பஸ்களும் ஓடாது. 5ம் தேதி காலை 6:00 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.
இந்த வேலை நிறுத்தத்தில் மெக்கானிக்குகள், ஊழியர்கள், ஊழியர்களின் குடும்பத்தினர் 1.20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பாக, இம்மாதம் 15ம் தேதி முதல்வர் சித்தராமையாவுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன்பு டீசல் விலையையும், டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்திய அரசு, எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
அரசின், 'சக்தி' திட்டம் மூலம் போக்குவரத்து தொழிலாளர்கள், அரசுக்கு வருவாயையும், பொது மக்களின் நன்மதிப்பையும் கொண்டு வந்துள்ளனர். ஆனாலும், எங்களின் கோரிக்கையை அரசு புறக்கணிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.