தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சித்தராமையாவின் ஆதரவு எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்கள்...  வெளிநாடு சுற்றுலா! நாங்கள் வேறு அணி என்று சிவகுமார் ஆதரவாளர் கடுப்பு

சித்தராமையாவின் ஆதரவு எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்கள்...  வெளிநாடு சுற்றுலா! நாங்கள் வேறு அணி என்று சிவகுமார் ஆதரவாளர் கடுப்பு

சித்தராமையாவின் ஆதரவு எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்கள்...  வெளிநாடு சுற்றுலா! நாங்கள் வேறு அணி என்று சிவகுமார் ஆதரவாளர் கடுப்பு


UPDATED : பிப் 19, 2026 07:35 AM

ADDED : பிப் 19, 2026 07:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 19, 2026 07:35 AM ADDED : பிப் 19, 2026 07:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.,க்கள், 11 பேர் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளதால், துணை முதல்வர் சிவகுமார் தரப்பு கடுப்பாகி உள்ளது. 'அவர்கள் வேறு அணி; நாங்கள் வேறு அணி' என்று, சிவகுமார் ஆதரவாளரான மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்காக, சித்தராமையா, சிவகுமார் இடையிலான மோதல் நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இவ்விஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல், காங்கிரஸ் மேலிடமும் திணறுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சித்தராமையாவின் ஆதரவாளரான கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ் ஏற்பாட்டில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 35 பேர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுற்றுலா செல்ல உள்ளனர் என்ற தகவல் வெளியானது.

கார்கே அனுமதி 'பதவியை தக்கவைத்து கொள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, சித்தராமையா வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்' என்று பேச்சு அடிபட்டது. ஆனால், இதை முதல்வர் மறுத்தார். எம்.எல்.ஏ.,க்கள் சொந்த பணத்தில் வெளிநாடு சுற்றுலா செல்வதாகவும், அவர்களை தடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

எம்.எல்.ஏ.,க்கள் வெளிநாடு சென்றால், நிலைமை விபரீதம் ஆகும் என்பதை உணர்ந்த கட்சி மேலிடம், 'யாரும் வெளிநாடு செல்ல கூடாது' என்று உத்தரவு போட்டது.

ஆனாலும், சில எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்து, 'எங்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறோம். இதற்கு அனுமதி தர கூடாதா' என்று கேட்டனர்.

இதையடுத்து, வெளிநாடு செல்ல எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், 35 எம்.எல்.ஏ.,க்கள் செல்ல உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், 21 எம்.எல்.ஏ.,க்கள் செல்வதாக இறுதி தகவல் வெளியானது. கடைசியாக, நேற்று முன்தினம் இரவு 11 பேர் மட்டுமே கிளம்பி சென்றனர்.

அமைச்சர் பயணம் இதன்படி, எம்.எல்.ஏ.,க்கள் ஜகலுார் - தேவேந்திரப்பா, சிக்கமகளூரு - தம்மையா, சாம்ராஜ்நகர் - புட்டரங்கஷெட்டி, சிரகுப்பா - நாகராஜா, இண்டி - யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல், எம்.எல்.சி.,க்கள் சரணகவுடா பையாபுரா, வசந்த்குமார், நாகராஜ் யாதவ், திம்மையா ஆகிய 10 பேரும், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து முதலில் மலேஷியாவின் கோலாம்பூர் சென்று, அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுலா முடித்து விட்டு நியூசிலாந்து செல்கின்றனர். வரும் 1ம் தேதி பெங்களூரு வர உள்ளனர். எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்களை தொடர்ந்து, கர்நாடக தோட்டக்கலை அமைச்சர் மல்லிகார்ஜுனும், தனது மனைவி பிரபா, உறவினர்கள் ஏழு பேருடன், பெங்களூரில் இருந்து தாய்லாந்தின் புக்கட் தீவுக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கிருந்து, தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவுக்கு செல்ல உள்ளார். இவரும், சித்தராமையாவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடு சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்கள் அனைவரும், சித்தராமையா ஆதரவாளர்கள் என்பதால் சிவகுமார் தரப்பு கடுப்பாகி உள்ளது.

இது குறித்து சிவகுமார் ஆதரவாளரான மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறுகையில், ''வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள, எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்கள் வேறு அணி. நாங்கள் வேறு அணி. அவர்கள் என்னை அழைக்கவில்லை. ஒரே மனநிலை, ஒரே வயது உடையவர்கள் சென்று உள்ளனர். அவர்களுக்கு நல்லது நடக்கட்டும்,'' என்றார்.

மாண்டியா எம்.எல்.ஏ., ரவிகுமார் கனிகா கூறுகையில், ''எம்.எல்.ஏ.,க்கள் வெளிநாடு சுற்றுலா சென்றிருப்பதன் மூலம், அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. முதல்வர் பதவி குறித்து முடிவு எடுக்க வேண்டியது கட்சி மேலிடம்,'' என்றார்.

ஆயினும் இந்த வெளிநாட்டு பயணம், கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us