/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பூங்கா செடிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்
/
பூங்கா செடிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்
ADDED : மார் 27, 2025 05:29 AM
பெங்களூரு: பூங்காக்களுக்கும், சாலையோர செடிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீரை வினியோகிக்க, பெங்களூரு மாநகராட்சி 300 டிராக்டர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி தோட்டக்கலை பிரிவு துணை இயக்குநர் சந்திரசேகர் கூறியதாவது:
பெங்களூரில் பூங்காக்களின் ஆழ்துளைக் கிணறுகளில் மார்ச் ஆரம்பத்திலேயே நீர்மட்டம் குறைந்துள்ளது. எனவே மரங்கள், செடிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 1,287 பூங்காக்களுக்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்து, நீர் வினியோகிக்கப்படும். தண்ணீர் கொண்டு வர, 300 டிராக்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பைரசந்திரா, நாயண்டஹள்ளி, ஜெ.சி.சாலை, ஹெப்பால், நாகசந்திரா, மஹாதேவபுராவில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்து, தினமும் 30 முதல் 40 டேங்கர்களில் தண்ணீர் கொண்டு வந்து, பூங்காக்களில் மரங்கள், செடிகளுக்கு பாய்ச்சப்படும்.
இதைத் தவிர 400 பூங்காக்களில், 'யுனைடெட் வே பெங்களூரு' என்ற அரசு சாரா தொண்டு அமைப்பு, 1,000 மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்துள்ளது.
மாநகராட்சி பூங்காக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் வினியோகிக்க, குடிநீர் வாரியத்துக்கு லிட்டருக்கு 20 ரூபாய் வீதம் கட்டணம் வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.