கொலை வழக்கில் 13 பேர் விடுதலையால் 14வது குற்றவாளி மீதான விசாரணை ரத்து
கொலை வழக்கில் 13 பேர் விடுதலையால் 14வது குற்றவாளி மீதான விசாரணை ரத்து
ADDED : மார் 05, 2026 05:03 AM
பெங்களூரு: கொ லை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், 14வது குற்றவாளி மீதான விசாரணையை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூரு ஜே.பி., நகரை சேர்ந்தவர் வருண், 24. கடந்த, 2019 ஆகஸ்ட், 25ல் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், 14 பேரை கைது செய்து, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
செஷன்ஸ் நீதிமன்ற விசாரணையின் போது, அரசு தரப்பில் சரியான சாட்சிகளை சமர்ப்பிக்காததால், 13 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 14வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரவீன் என்பவர் மீதான விசாரணை மட்டும் நடந்து வந்தது.
அதனால், 'தன் மீதான விசாரணையை ரத்து செய்ய வேண்டும்' எனக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரவீன் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'கொலை வழக்கில் கைதான 14 பேரில், 13 பேரை, 2025 ஆகஸ்ட், 30ல் செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
'இத்தனைக்கும், விடுவிக்கப்பட்ட 13 பேரும், விசாரணையின் போது தலைமறைவாக இருந்தவர்கள். ஆனால், என் மனுதாரர் மீதான விசாரணை மட்டும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
'எனவே மனுதாரரையும் வழக்கில் இருந்து விடுக்க வேண்டும்' என்றார்.
இதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி நாகபிரசன்னா பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரையும், செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அரிதிலும் அரிதாக, குற்றம்சாட்டப்பட்ட 14வது குற்றவாளியின் மீதான விசாரணை நடந்து வருகிறது.
போதிய சாட்சி, ஆதாரங்கள் இல்லாததால், 13 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். விசாரணை அதிகாரியும் குற்றவாளிக்கு எதிரான சாட்சி, ஆதாரங்களை சேகரிப்பதில் தோல்வி அடைந்துவிட்டார்.
இத்தகைய சூழ்நிலையில், செஷன்ஸ் நீதிமன்றம் விசாரணை நடத்தினாலும், மனுதாரர் விடுவிக்கப்படலாம். எனவே, நீதிமன்றத்தின் மதிப்புமிக்க நேரத்தை வீணாகாமல் தவிர்க்க, மனுதாரருக்கு எதிரான வழக்கை ரத்து செய்வது பொருத்தமானது.
அதனால், அவர் மீதான விசாரணை ரத்த செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
