/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விற்ற காருக்கு நிவாரணம் கேட்டவருக்கு ரூ.40,000 அபராதம்: தீர்ப்பாயம் உத்தரவு
/
விற்ற காருக்கு நிவாரணம் கேட்டவருக்கு ரூ.40,000 அபராதம்: தீர்ப்பாயம் உத்தரவு
விற்ற காருக்கு நிவாரணம் கேட்டவருக்கு ரூ.40,000 அபராதம்: தீர்ப்பாயம் உத்தரவு
விற்ற காருக்கு நிவாரணம் கேட்டவருக்கு ரூ.40,000 அபராதம்: தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : ஜூன் 21, 2025 11:10 PM
பெங்களூரு: தனக்கு சொந்தமில்லாத சொத்துக்காக சட்டப்போராட்டம் நடத்த முடியாது என்பது பொது விதிமுறை. தவறான தகவல் தெரிவித்து, நுகர்வோர் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்த புகார்தாரருக்கு நுகர்வோர் தீர்ப்பாயம், 40,000 ரூபாய் அபராதம் விதித்தது.
பெங்களூரின் மோகன் என்பவர் 2019 மே மாதம், 5.22 லட்சம் ரூபாய் கொடுத்து, ஹூண்டாய் கார் வாங்கினார். ஏதாவது பழுது ஏற்பட்டால், 'ஹூண்டாய் மோட்டார்ஸ் பிரைவேட் இந்தியா லிமிடெட்' நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மையங்களில் சரி செய்து கொண்டார்.
கியாரண்டி
கடந்த 2024 ஏப்ரல் 11ம் தேதியன்று, 14,866 ரூபாய் செலுத்தி, காரின் அனைத்து விதமான பழுதுகளை சரி செய்து கொள்ளும் கியாரண்டியை நீட்டித்துக் கொண்டார். 2024 அக்டோபர் 25ம் தேதி, காரில் பயணம் செய்தபோது, பிரேக் பெயிலானது. உடனடியாக நிறுத்திய அவர் பேனட்டை திறந்து பார்த்தபோது, தீப்பிடித்திருந்தது. தீயை அணைத்துவிட்டு, சர்வீஸ் சென்டருக்கு காரை கொண்டு சென்றார்.
காரை பரிசோதித்த சர்வீஸ் சென்டர் ஊழியர், பழுது நீக்க லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் என்றனர். அதன்பின் மோகன், காப்பீடு நிறுவனத்தை தொடர்பு கொண்டு, தகவல் கூறினார். காரை பரிசோதித்த அந்நிறுவனத்தினர், தொழில்நுட்ப கோளாறால் தீப்பிடித்தது. கியாரண்டி இருப்பதால், ஹூண்டாய் சர்வீஸ் சென்டரில் சரி செய்து கொள்ளும்படி கூறினர்; அதன்படி அவரும் சரி செய்து கொண்டார்.
காரில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால், இந்த காரை, வேறு ஒருவருக்கு மோகன் விற்றுவிட்டார். அதன்பின் ஹூண்டாய் நிறுவனம் மீது குற்றஞ்சாட்டி, பெங்களூரு நுகர்வோர் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தார்.
'காரின் கியர் பாக்சில் பிரச்னை ஏற்பட்டது. இதை சரி செய்து தரும்படி, ஹூண்டாய் நிறுவனத்திடம், பல முறை வேண்டுகோள் விடுத்தும் பொருட்படுத்தவில்லை. எனவே நிவாரணம் வழங்க, அந்நிறுவனத்துக்கு உத்தரவிடுங்கள்' என, கோரினார்.
அதிருப்தி
நுகர்வோர் தீர்ப்பாயம் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, வேறு நபருக்கு காரை விற்றது தெரிந்தது. இதனால் அதிருப்தி அடைந்த தீர்ப்பாயம், 'அசையும் மற்றும் அசையா சொத்துகளை விற்ற பின், அதன் மீதான உரிமை, சொத்துகளை வாங்கியவருக்கு இடம் மாறும்; விற்றவருக்கு எந்த உரிமையும் இருக்காது. மனுதாரர் காரை விற்றுள்ளார். தனக்கு சொந்தமில்லாத சொத்துக்காக சட்டப்போராட்டம் நடத்த முடியாது என்பது பொது விதிமுறை. ஆனால் மனுதாரர் சட்டவிரோதமாக, ஹூண்டாய் நிறுவனத்திடம் நிவாரணம் பெற முயற்சித்துள்ளார். தவறான நோக்கத்துடன் புகார் அளித்து, தீர்ப்பாயத்தின் நேரத்தை வீணாக்கியுள்ளார்' என, அதிருப்தி தெரிவித்தது.
புகார்தாரர் மோகனுக்கு 40,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன் தினம் உத்தரவிட்டது.
'உத்தரவு வெளியான 30 நாட்களுக்குள், அபராத தொகையை, நுகர்வோர் நலன் நிதியில் செலுத்த வேண்டும். தவறினால் ஆண்டுக்கு 10 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும்' என, உத்தரவிட்டது.

