ADDED : ஏப் 19, 2025 11:04 PM
துமகூரு:
'ஹனி டிராப்' வழக்கில் திடீர் திருப்பமாக, பா.ஜ., பிரமுகர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
துமகூரின் குப்பியை சேர்ந்தவர் அன்னப்பா, 38. பா.ஜ., பிரமுகர். இவருக்கும், கியாதசந்திராவின் நிஷா, 27, என்பவருக்கும், முகநுால் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. பின் மொபைல் போன் மூலம் பேசினர்; நேரிலும் அடிக்கடி சந்தித்தனர்.
கடந்த பிப்ரவரி 15ல் பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூரில் உள்ள லாட்ஜுக்கு இருவரும் சென்று நெருக்கமாக இருந்தனர். இதை ஜன்னல் வழியாக இருவர், மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். அன்னப்பாவிடம் வீடியோவை காண்பித்து 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர்.
இதுபற்றி கடந்த மாதம் 8ம் தேதி குப்பி போலீசில் அன்னப்பா, 'ஹனி டிராப்' புகார் செய்தார். நிஷா கைது செய்யப்பட்டார். பின், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் குப்பி போலீசில் நிஷா நேற்று அளித்த புகாரில், 'அன்னப்பா, என்னை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிவிட்டார்' என்று கூறி இருந்தார்.
இந்த புகாரின்படி அன்னப்பா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

