/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐ.டி., ஊழியர் அடித்து கொலை: உடலை புதைத்த இருவர் கைது
/
ஐ.டி., ஊழியர் அடித்து கொலை: உடலை புதைத்த இருவர் கைது
ஐ.டி., ஊழியர் அடித்து கொலை: உடலை புதைத்த இருவர் கைது
ஐ.டி., ஊழியர் அடித்து கொலை: உடலை புதைத்த இருவர் கைது
ADDED : நவ 19, 2025 09:02 AM

அத்திப்பள்ளி: பணத்தை திருப்பிக் கேட்டதால், சுத்தியலால் அடித்து ஐ.டி., நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டா ர். உடலை வீட்டின் பின்பக்கம் புதைத்த, உறவினர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், குப்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத், 30. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தார். மனைவி, குழந்தையுடன், அத்திப்பள்ளி நெரலுாரில் வசித்தார். கடந்த மாதம் 27ம் தேதி காலை, குப்பத்திற்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு, ஸ்ரீநாத் சென்றார்.
மொபைல் போனை எடுத்துச் செல்லவில்லை. இரண்டு நாட்கள் ஆகியும் ஸ்ரீநாத் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த மனைவி குப்பத்திற்கு சென்று விசாரித்தபோது, கணவரை பற்றி எந்த தகவலும் இல்லை. பெங்களூரு திரும்பிய அவர், கணவரை காணவில்லை என்று, அத்திப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர்.
தகவல் மீட்பு ஸ்ரீநாத் மொபைல் போனை ஆய்வு செய்ததில், குப்பத்தில் வசிக்கும் தன் உறவினர் பிரபாகர், 37, என்பவருடன் அடிக்கடி பேசியது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்த போது, 'உறவினர் என்பதால் ஸ்ரீநாத்திடம் அடிக்கடி பேசினேன். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை' என, போலீசாரிடம் கூறினார்.
அவரது நடவடிக்கையை போலீசார் கண்காணித்தனர். இதற்கிடையில் ஸ்ரீநாத்தின் மொபைல் போனை, தடயவியல் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவரது மொபைலில் இருந்து அழிக்கப்பட்ட பல தகவல்கள் மீட்கப்பட்டன.
பண தகராறு பணப் பரிவர்த்தனை தொடர்பாக பிரபாகருக்கு, ஸ்ரீநாத் நிறைய மெசேஜ்கள் அனுப்பியதும், பின் அழித்ததும் தெரிந்தது. இதையடுத்து கடந்த 16ம் தேதி பிரபாகரிடம் மீண்டும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஸ்ரீநாத்தை தன் நண்பர் ஜெகதீஷ், 36, என்பவருடன் சேர்ந்து, சுத்தியலால் அடித்துக் கொலை செய்ததையும், குப்பத்தில் உள்ள ஸ்ரீநாத் வீட்டின் பின்புறம், அவரது உடலை புதைத்ததையும் ஒப்புக் கொண்டார். பிரபாகர், ஜெகதீஷ் கைது செய்யப்பட்டனர்.
கொலையான ஸ்ரீநாத்திடம் இருந்து, பிரபாகர் 40 லட்சம் ரூபாய் வாங்கி இருந்தார். அந்த பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறினார். ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டதால் ஸ்ரீநாத்தை கொலை செய்ய, பிரபாகர், தன் நண்பர் ஜெகதீசுடன் சேர்ந்து திட்டம் போட்டார்.
ஸ்ரீநாத்தை, குப்பத்திற்கு வரவழைத்து தீர்த்துக் கட்டினர். உடலை புதைத்து விட்டு நாடகமாடியது அம்பலமானது. ஸ்ரீநாத்தின் உடல் குப்பம் தாசில்தார் சிவய்யா முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
கைதான இருவரும், ஏற்கனவே தங்கள் மனைவியரை கொன்ற வழக்கில் சிறைக்கு சென்றவர்கள். தற்போது ஜாமினில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

