கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட இருவர் கைது
கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட இருவர் கைது
ADDED : ஜூலை 21, 2026 08:16 PM
கும்பலகோடு: பெங்களூரில், கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட, சென்னையை சேர்ந்தவர் உட்பட, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரின் கும்பலகோடு பி.டி.ஏ., அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில், 500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுவதாக கிடைத்த தகவலின்படி, கும்பலகோடு போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த 3ம் தேதி, கெஞ்சனபுரா கிராஸ் பகுதியில், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மைசூரை சேர்ந்த அரவிந்த், 47, கைது செய்யப்பட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டுகளை அச்சடித்து, சென்னையில் வசிக்கும் நண்பர் வெங்கட சுப்பிரமணியன், 60, என்பவருக்கு அனுப்பி வைத்ததும், அவர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து வெங்கட சுப்பிரமணியனை, கும்பலகோடு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 500 ரூபாய் 338 கள்ளநோட்டுகள், ஒரு கலர் ஜெராக்ஸ் இயந்திரம், மடிக்கணினி, மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
