தங்கையின் மாமியாரை தீ வைத்து கொன்ற சகோதரர்கள் இருவர் கைது
தங்கையின் மாமியாரை தீ வைத்து கொன்ற சகோதரர்கள் இருவர் கைது
ADDED : மார் 27, 2026 05:33 AM

சிக்கபல்லாபூர்: தங்கை இருக்கும் இடத்தை கூற மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி அண்ணன்கள் தீ வைத்ததில், அப்பெண் உயிரிழந்தார். இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி., குஷால் சவுகே நேற்று கூறியதாவது:
சிக்கபல்லாபூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா கே.ஜி.என்., பகுதியை சேர்ந்தவர் லட்சுமி தேவம்மா, 65. கடந்த மார்ச், 21ம் தேதி தன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது அறைக்குள் பெட்ரோலை ஊற்றி, மர்ம நபர்கள் தீ வைத்தனர். படுகாயம் அடைந்த லட்சுமி தேவம்மா, மருத்துவமனையில், 35 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
லட்சுமி தேவம்மாவின் கணவர் ராமகிருஷ்ணாவிடம் விசாரித்த போது, அவரது இளைய மகன் புருஷோத்தம், கடந்தாண்டு ஜூன் மாதம் தான் காதலித்து வந்த பெண்ணை, பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டார்.
அதனால் கோபத்தில் இருந்த பெண்ணின் சகோதரர்கள் நவீன், வினோத் ஆகிய இருவரும், சம்பவ தினத்திற்கு முந்தைய நாள் மார்ச், 20ம் தேதி லட்சுமி தேவம்மா வீட்டுக்கு மது போதையில் சென்றனர்.
அங்கு சென்று, 'உங்களின் மகன் எங்குள்ளான். எங்கள் தங்கை இருக்கும் இடத்தை கூறுங்கள்' என்று மிரட்டி உள்ளனர். தங்களுக்கு தெரியாது என்று கூறியதால், கோபம் அடைந்த இருவரும், அங்கிருந்து சென்று விட்டனர்.
மறுநாள் இரவு லட்சுமி தேவம்மா உறங்கும் அறையை அடையாளம் கண்ட அவர்கள், பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
