கலைஞர்களை வசைபாடிய திம்மரோடி மீது இரு வழக்குகள் பதிவு
கலைஞர்களை வசைபாடிய திம்மரோடி மீது இரு வழக்குகள் பதிவு
ADDED : ஏப் 17, 2026 05:03 AM

தட்சிண கன்னடா: யக் ஷகானா கலைஞர்களை ஆபாசமாக பேசிய மகேஷ் திம்மரோடி மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
தர்மஸ்தலாவில் நுாற்றுக்கணக்கான பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக பொய் வழக்கின் மூலம் உலகிற்கு அறியப்பட்டவர் ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பின் தலைவர் மகேஷ் திம்மரோடி. இவர், இந்த வழக்கை பயன்படுத்தி, தர்மஸ்தலா கோவில் நிர்வாகம் மீது பல அவதுாறுகளை பரப்பினார். இதனால், போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்தக் கதையை பிரதிபலிக்கும் வகையில், பொய் கும்பல் என்ற தலைப்பில், தட்சிண கன்னடாவின் புத்துாரில் யக் ஷகானா (நாட்டுப்புற கலை) கலைஞர்கள் சமீபத்தில் நாடகம் நடத்தினர். தர்மஸ்தலா வழக்கில் அவதுாறு பரப்பியவர்களை கேலி செய்யும் விதமாக நாடகம் இருந்தது. நாடகத்தில்மகேஷ் திம்மரோடியும் விமர்சிக்கப்பட்டார்.
இதையறிந்த திம்மரோடி கடந்த, 11ம் தேதி நாடகம் போட்ட புத்துாரை சேர்ந்த யக் ஷகானா கலைஞர்கள் தினேஷ் ஷெட்டி,சுந்தர் ராய் ஆகியோரை போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகளால் திட்டினார். மேலும், இருவரின் தாய் குறித்தும் ஆபாசமாக பேசினார்.
இதனால், ஆத்திரம் அடைந்த சுந்தர் ராய், திம்மரோடி மீது சம்ப்யா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதே நேரத்தில், தினேஷ் ஷெட்டியின் தாய் லீலாவதி,தன்னை பற்றி ஆபாசமாக கருத்து தெரிவித்த திம்மரோடி மீது புத்துார் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். திம்மரோடி மீது இரு போலீஸ் நிலையத்திலும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
