/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு, சிக்கமகளூரில் மழைக்கு 3 வயது குழந்தை உட்பட இருவர் பலி
/
பெங்களூரு, சிக்கமகளூரில் மழைக்கு 3 வயது குழந்தை உட்பட இருவர் பலி
பெங்களூரு, சிக்கமகளூரில் மழைக்கு 3 வயது குழந்தை உட்பட இருவர் பலி
பெங்களூரு, சிக்கமகளூரில் மழைக்கு 3 வயது குழந்தை உட்பட இருவர் பலி
ADDED : மார் 24, 2025 05:05 AM

பெங்களூரு: பெங்களூரு, சிக்கமகளூரில் மழைக்கு மூன்று வயது பெண் குழந்தை உட்பட, இருவர் உயிரிழந்து உள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பெங்களூரில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. எலஹங்கா, கோகிலு கிராஸ், சஞ்சய்நகர், மேக்ரி சதுக்கம், அட்டூர் லே - அவுட், பாபுசாப்பாளையா, பேட்ராயனபுரா, நாகவாரா, ஹெப்பால் உள்ளிட்ட பகுதியில் சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
பெங்களூரு கம்மனஹள்ளி குள்ளப்பா சதுக்கம் பகுதியில் வசிக்கும் சத்யா என்பவர் தனது மகள் ரக் ஷா, 3, என்பவருடன் நேற்று முன்தினம் இரவு, பைக்கில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு சென்றார். புலிகேசிநகர் ஜீவனஹள்ளி பகுதியில் சென்ற போது, மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த, ரக் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
சத்யாவுக்கு முதுகு தண்டு உடைந்து உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்யா வீட்டிற்கு சென்று, மாநகராட்சி அதிகாரிகள் ஆறுதல் கூறினர். மழையால் சாலையில் விழுந்த மரங்களை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று வெட்டி அகற்றினர்.
இந்நிலையில் பெங்களூரு, சிக்கமகளூரு உட்பட 20 மாவட்டங்களில் நேற்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. பெங்களூரில் நேற்று காலை வெயில் அடித்த நிலையில், மதியம் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மழை பெய்யும் சூழ்நிலை இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை.
சிக்கமகளூரு மாவட்டத்தில் பரவலான மழை பெய்தது. சிக்கமகளூரு அருகே குருபஹள்ளியில், வயலில் வேலை செய்த நாகம்மா, 65 என்ற பெண் மின்னல் தாக்கி இறந்தார்.
கடந்த 22 ம் தேதி காலை 8:30 மணியில் இருந்து நேற்று காலை 8:30 மணி வரை 24 மணி நேர நிலவரப்படி ராம்நகரின் கனகபுரா தாலுகா சக்கனஹள்ளியில் 17 செ.மீ., பெங்களூரு சொன்னேனஹள்ளியில் 7.45 செ.மீ., மாண்டியா ஹெச்.பசவனபுராவில் 8.8 செ.மீ., பெங்களூரு ரூரல் நல்லுாரில் 6.55 செ.மீ., தங்கவயல் கேசம்பள்ளியில் 5.7 செ.மீ., மழை பெய்து உள்ளது.