/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொலை வழக்கில் இருவருக்கு 'ஆயுள்'
/
கொலை வழக்கில் இருவருக்கு 'ஆயுள்'
ADDED : நவ 05, 2025 12:46 AM

பெங்களூரு: பைக்கால் மோதியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்து உருட்டுக் கட்டையால் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். அவரை கொலை செய்த இருவருக்கு, 59வது சிட்டி சிவில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பெங்களூரை சேர்ந்தவர் சித்தார்த், 25. கடந்த 2018 ஜூன் 26ம் தேதி தன் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அதிகாலை 2:45 மணியளவில், இயற்கை உபாதை கழிக்க, காரை நிறுத்திவிட்டு, வெளியே நின்றிருந்தார்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், வேண்டுமென்றே சித்தார்த் மீது மோதினர். அவர்களில் ஒருவரை சித்தார்த் பிடித்து விட்டார்.
அப்போது ஏற்பட்ட வாய் தகராறு சண்டையாக மாறியது. கீழே கிடந்த உருட்டுக் கட்டையால், சித்தார்த்தின் தலையில் அடித்துவிட்டு அவர்கள் தப்பிவிட்டனர்.
படுகாயம் அடைந்த சித்தார்த், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். சிகிச்சை பலனின்றி, 28ம் தேதி உயிரிழந்தார். வழக்குப் பதிவு செய்த மைக்கோ லே - அவுட் போலீசார், கிரிஷ், மகேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இவ்வழக்கு 59வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை போலீசார் சமர்ப்பித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இதுகுறித்து சித்தார்த் தந்தை கவுசலேந்திரா கூறுகையில், ''நீதிமன்றத்தின் உத்தரவு, எங்கள் மகனின் மரணத்துக்கு நீதி கிடைத்துள்ளது. மகனை இழந்து தவிக்கும் எங்களின் வலிக்கு தீர்வு கிடைத்துள்ளது,'' என்றார்.

