/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
31 பேர் பலியான வழக்கில் இருவருக்கு சிறை தண்டனை
/
31 பேர் பலியான வழக்கில் இருவருக்கு சிறை தண்டனை
ADDED : ஏப் 26, 2025 06:38 AM
மைசூரு : ஏரியில் டெம்போ கவிழ்ந்து, 31 பேர் பலியான வழக்கில் இருவருக்கு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மைசூரு நகரின், மைசூரு - நஞ்சன்கூடு பிரதான சாலையில் உள்ள, உன்டபத்தி ஏரிக்கரை மீது, 2010 டிசம்பர் 14ம் தேதியன்று டெம்போ ஒன்று, அதிவேகமாக சென்றது. அதில், 40க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ, ஏரியில் கவிழ்ந்து மூழ்கியது. அதில் பயணம் செய்த 31 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிவேகமாக சென்றது, டெம்போவில் அதிகமான பயணியரை ஏற்றிச் சென்றதும் விபத்துக்கு காரணமாக இருந்தது. இது தொடர்பாக, ஓட்டுநர் சேத்தன், வாகன உரிமையாளர் சஞ்சீவ் மூர்த்தி மீது வழக்குப் பதிவானது.
விசாரணை நடத்திய மைசூரு நகர போலீசார், மைசூரு நகரின் 11வது கூடுதல் ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 27 சாட்சியங்கள், 83 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
விசாரணையில் இருவரின் குற்றம் உறுதியானது. முதல் குற்றவாளியாக கருதப்பட்ட சேத்தனுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை, 12,600 ரூபாய் அபராதம், இரண்டாவது குற்றவாளியான சஞ்சீவ் மூர்த்திக்கு ஓராண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சஞ்சய் மல்லிகார்ஜுனய்யா, நேற்று தீர்ப்பளித்தார்.