'மேட்டி ஆன்மா சாந்தி அடைய உமேஷ் வெற்றி பெற வேண்டும்'
'மேட்டி ஆன்மா சாந்தி அடைய உமேஷ் வெற்றி பெற வேண்டும்'
ADDED : மார் 31, 2026 04:36 AM
பாகல்கோட்: ''மேட்டியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால், பாகல்கோட்டில் அவரது மகன் உமேஷ் வெற்றி பெற வேண்டும்,'' என, இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் சித்தராமையா கூறினார்.
பாகல்கோட் தொகுதிக்கு அடுத்த மாதம், 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் உமேஷ் மேட்டியை ஆதரித்து சுதகுந்தரா, நயனஹள்ளி கிராமங்களில், முதல்வர் சித்தராமையா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மரணம் அடைந்த எம்.எல்.ஏ., மேட்டி கடின உழைப்பாளி. எப்போதும் பாகல்கோட் வளர்ச்சியை பற்றியே சிந்தித்தவர். எப்போது என்னை சந்தித்தாலும், பாகல்கோட்டில் மருத்துவ கல்லுாரி அமைக்க வேண்டும் என்று கேட்பார். அவரது ஆசையை நிறைவேற்ற, மருத்துவ கல்லுாரி அமைக்க அடிக்கல் நாட்டி உள்ளோம்.
தேர்தலில் போட்டியிட மேட்டியின் இரு மகன்கள், மகள்கள், 'சீட்' கேட்டனர். யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் இணைந்து பணியாற்றுவதாக கூறினர். அதன்படி, உமேஷுக்கு சீட் கொடுத்து உள்ளோம். அவரை வெற்றி பெறச்செய்து விதான் சவுதாவுக்கு அனுப்பி வையுங்கள். மேட்டியின் ஆன்மா சாந்தி அடைய உமேஷ் வெற்றி பெற வேண்டும்.
அலமாட்டி அணை விவகாரத்தில், மத்திய அரசு மக்கள் விரோத நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது. அணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு பணம் விடுவிக்கவில்லை. நாங்கள் ஒரு ஏக்கர் பாசன நிலத்திற்கு, 40 லட்சம் ரூபாயும், வறண்ட நிலத்திற்கு, 30 லட்சம் ரூபாயும் இழப்பீடு அறிவித்து உள்ளோம்.
எடியூரப்பா, பசவராஜ் பொம்மை அரசு கொள்ளை மட்டுமே அடித்தது. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவில்லை. மத்திய அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு விலை வழங்கவில்லை. விவசாய அமைப்புகள், சர்க்கரை ஆலை உரிமையாளர்களிடம் பேசி, ஆதரவு விலையை காங்கிரஸ் அரசு வழங்கி உள்ளது.
அஹிந்தா சமூகங்களின் தலைவராக இருந்த மேட்டி, மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்த்தார். அவரை பற்றி பா.ஜ., தலைவர்கள் பொய் பிரசாரம் செய்கின்றனர்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
