/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தகுதியற்ற கழிப்பறைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு
/
தகுதியற்ற கழிப்பறைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு
ADDED : ஜன 30, 2026 06:30 AM
பெங்களூரு: பெங்களூரின் பெரும்பாலான பொது கழிப்பறைகள், பயன்படுத்த தகுதியாக இல்லை. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், பெங்களூரின் 21 வார்டுகளின் பல்வேறு இடங்களில் 38 பொது கழிப்பறைகள் கட்டியது. மத்திய அரசின் பரிந்துரைப்படி, பெங்களூரு திடக்கழிவு நிர்வகிப்பு மேலாண்மை நிறுவனம், இவற்றின் துாய்மையை ஆய்வு செய்கிறது.
பெங்களூரில் உள்ள பொது கழிப்பறைகளை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. புதிதாக கட்டப்பட்ட 38 பொது கழிப்பறைகளில், 17 மட்டுமே பயன்படுத்த தகுதியாக உள்ளன. மற்றவை பெண்கள், மூத்த குடிமக்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தகுதியாக இல்லை.
பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. சரியான திட்டமிடல் இல்லாமல், கழிப்பறைகளை கட்டியுள்ளனர். சில கழிப்பறைகளில் தண்ணீர் வசதியே இல்லை. கழிப்பறைக்கு வெளியே பாதுகாப்புக்கு, கண்காணிப்பு கேமராக்களும் இல்லை.
'கோடிக்கணக்கான ரூபாய் செலவில், கட்டப்பட்ட கழிப்பறைகள், மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். இந்த குளறுபடியை சரி செய்ய வேண்டும்.
பெண்களுக்கு பாதுகாப்பான, தரமான கழிப்பறைகளை கட்ட வேண்டும். துாய்மை ஆய்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும்' என, மகளிர் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

