ஆர்.எஸ்.எஸ்., மீது காங்.,குக்கு வெறுப்பு மத்திய அமைச்சர் ஜோஷி குற்றச்சாட்டு
ஆர்.எஸ்.எஸ்., மீது காங்.,குக்கு வெறுப்பு மத்திய அமைச்சர் ஜோஷி குற்றச்சாட்டு
ADDED : ஆக 28, 2026 11:23 PM

ஹூப்பள்ளி: ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பில் பங்கேற்ற இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ்., மீது காங்கிரஸ் வெறுப்புணர்வுடன் செயல்படுவதாக, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றஞ்சாட்டி உள்ளார்.
யாத்கிர் மாவட்டம், ஹுனசகி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அணிவகுப்பு நடந்தது. இதில், குப்பி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணா சாஹேப் தேஷ்முக், ஹுனசகியில் உள்ள மகளிர் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் குருராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
அவர்கள் இருவரையும் பள்ளி கல்வித்துறை துணை கமிஷனர் சன்னபசப்பா முதோல், சஸ்பெண்ட் செய்து சமீபத்தில் உத்தரவிட்டார்.
இது குறித்து, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ''பதிவு செய்யப்படாத அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் ஆசிரியர்கள் பங்கேற்றதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்,'' என்றார்.
இதற்கு, மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று கண்டனம் தெரிவித்தார். ஹூப்பள்ளியில் அவர் அளித்த பேட்டி:
ஆர்.எஸ்.எஸ்., மீது காங்கிரஸ் வெறுப்புணர்வுடன் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பழிவாங்குவதை காங்கிரஸ் அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்., பேரணியில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மீது எப்போதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, அதையெல்லாம் நீதிமன்றங்கள் ரத்து செய்து உள்ளன.
இதற்கான வரலாற்று சான்றுகள், என்னிடம் உள்ளன. நேரம் வரும்போது வெளியிட தயார். இந்த சஸ்பெண்ட் உத்தரவையும் நீதிமன்றம் நிச்சயம் ரத்து செய்யும். அப்போது, காங்கிரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
