கொண்டக்கடலை விவசாயிகள் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு அமைச்சர் ஜோஷி தகவல்
கொண்டக்கடலை விவசாயிகள் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு அமைச்சர் ஜோஷி தகவல்
ADDED : ஜன 25, 2026 05:15 AM
பெங்களூரு: கடினமான காலங்களில் கர்நாடக விவசாயிகளுக்கு துணையாக இருந்த மத்திய அரசு, தற்போது கொண்டக்கடலை விவசாயிகளுக்கு ஆதரவாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கர்நாடகாவில் முக்கிய பருப்பு வகைகளில் கொண்டக்கடலை ஒன்றாகும், 22.83 லட்சம் ஏக்கரில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போதைய விலை, சந்தை விலையை விட மிகக் குறைவாக இருப்பதால் கொண்டக்கடலை விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
எனவே, ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கடிதம் எழுதி இருந்தார்.
கொண்டக்கடலையின் தற்போதைய சந்தை விலை, 2026- - 27 ம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையான, குவிண்டாலுக்கு 5,875 ரூபாயை விட மிகக் குறைவு. வரும் நாட்களில் கொண்டக்கடலையின் விலை மேலும் குறையும் என்ற அச்சம் உள்ளது. எனவே, கர்நாடகாவில் கொண்டக்கடலைக்கு ஆதரவு விலை திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக பிரஹலாத் ஜோஷி கோரியிருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மாநில விவசாயிகளின் நலனுக்காக ஒரு லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கொண்டக்கடலையை ஆதரவு விலையில் வாங்க முடிவு செய்வதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மாநில அரசு உடனடியாக மாவட்ட வாரியாக கொள்முதல் மையங்களை அமைத்து, விவசாயிகளிடமிருந்து ஆதரவு விலையில் கொண்டக்கடலை வாங்கும் பணியைத் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ஜோஷி கோரியுள்ளார். கர்நாடக மக்களுக்கு உதவியதற்காக பிரதமர் மோடி, விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நன்றி தெரிவித்துள்ளார்.
