கர்நாடக பா.ஜ., தலைவர் பதவி மீது மத்திய அமைச்சர் சோமண்ணா 'கண்'
கர்நாடக பா.ஜ., தலைவர் பதவி மீது மத்திய அமைச்சர் சோமண்ணா 'கண்'
ADDED : மே 06, 2026 11:50 PM

பெங்களூரு: ''கட்சி மேலிடம், கடவுள், மக்களின் கருணை கிடைத்தால், கர்நாடக பா.ஜ., தலைவர் ஆவேன்,'' என்று, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கூறி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தாவணகெரே தெற்கு, பாகல்கோட் இடைத்தேர்தலில், பா.ஜ., தோற்றது வேதனை அளிக்கிறது. கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி இருந்தால், இந்த தோல்வி கிடைத்து இருக்காது. நான் யாரையும் குறை சொல்லவில்லை. எதிர்காலத்தில் எல்லாம் சரியாகி விடும் என நம்புகிறேன். பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஒப்பு கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என்பதை, தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினுக்கு எனது வாழ்த்துகள்.
அந்த மாநில மக்கள் வரலாற்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். ஷியாம் பிரசாத் முகர்ஜி கண்ட கனவை, பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார்.
எடியூரப்பாவின் 50 ஆண்டு அரசியல் பயண மாநாட்டில் பங்கேற்க, எனக்கும் அழைப்பு வந்து உள்ளது. அவருடன் இணைந்து நானும் பணியாற்றி உள்ளேன். மாநாட்டிற்கு செல்கிறேன்.
ஆனால் மாநாடு எந்த மாதிரியாக நடக்கும் என்பது பற்றி, என்னிடம் தகவல் இல்லை. தற்போது ரயில்வே, ஜல்சக்தி துறைக்கு மத்திய இணை அமைச்சராக உள்ளேன். கட்சி மேலிடம், கடவுள், கர்நாடக மக்கள் ஆசி இருந்தால், கர்நாடக பா.ஜ., தலைவர் ஆவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயேந்திரா தலைவரான பின், ஆறு இடைத்தேர்தல்கள் நடந்து உள்ளன. இதில் ஒரு தொகுதியில் கூட, கட்சி வெற்றி பெறவில்லை.
இதனால் தலைவர் பதவியில் இருந்து விஜயேந்திராவை மாற்ற வேண்டும் என்று, கட்சிக்குள் பேச்சு அடிபடும் நிலையில், தலைவர் ஆகும் தனது ஆசையை சோமண்ணா சூசகமாக வெளிப்படுத்தி உள்ளார்.
இவரும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
