கோலாரில் தரம் குறைந்த கலப்பட பால் உரிமம் பெறாத மையங்களும் கண்டுபிடிப்பு
கோலாரில் தரம் குறைந்த கலப்பட பால் உரிமம் பெறாத மையங்களும் கண்டுபிடிப்பு
ADDED : மார் 29, 2026 03:48 AM

கோலார்: கோலார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட பால் சோதனைகளின் போது நிறைய குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
கோலாரில் நேற்று மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி அளித்த பேட்டி:
தனியார் பால் பண்ணைகள் லாபத்திற்காக பாலில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, கலப்படம் செய்வது கண்டறியப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 12 பால் சேகரிப்பு மையங்கள் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. இவற்றை உடனடியாக தடை செய்யப்படுகிறது.
முறைபடி உரிமம் பெற ஏழு நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அருந்தும் பாலில் எந்த வகையிலும் கலப்படம் செய்யப்படக் கூடாது.
துாய்மையை பராமரிக்காமல் குடிநீர் விற்பனை நிலையங்களில் கலப்பட தண்ணீரை வழங்கும் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதியின்றி செயல்படும் சுத்தமான குடிநீர் நிலையங்களை உடனடியாக மூடுமாறும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஸ் நிலையம் அருகே உள்ள பெரிய ஓட்டல்களில் சோதனை நடத்திய போது தண்ணீரில் நச்சுப் பொருட்களும்; சமையலறையில் சுகாதாரம் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.
இத்தகைய ஓட்டல்களின் உரிமைகளை ரத்து செய்யுமாறு நகராட்சிகளுக்கும், கிராம பஞ்சாயத்துகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பிளாஸ்டிக் உறைகளில் சூடான உணவு பொருட்கள் வழங்குவது கண்டிப்பாக தடை செய்யப் பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாழை இலைகளை பயன்படுத்த வேண்டும்.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். எரிவாயு, எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு நடத்துப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எந்த பற்றாக்குறை இல்லை. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட கூடுதல் கலெக்டர் எஸ்.எம்.மங்களா, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அதிகாரி ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
