உணவு, சிற்றுண்டி கிடைக்கவில்லை மேல்சபை உறுப்பினர்கள் அதிருப்தி
உணவு, சிற்றுண்டி கிடைக்கவில்லை மேல்சபை உறுப்பினர்கள் அதிருப்தி
ADDED : மார் 19, 2026 05:26 AM
பெங்களூரு: சமையல் காஸ் சிலிண்டர் பற்றாக்குறை பிரச்னை, மேல்சபையிலும் எதிரொலித்தது. பல நாட்களாக உணவு, சிற்றுண்டி சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என, உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
மேல்சபை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:
காங்., - ஐவான் டிசோசா: சமையல் காஸ் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்களுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் பவன் மற்றும் ஹோட்டல்களில், சரியாக உணவு, சிற்றுண்டி கிடைப்பது இல்லை. கடந்த ஒரு வாரமாக, நாங்கள் பரிதவிக்கிறோம்.
குறைந்தபட்சம் இந்திரா உணவகத்திலாவது சாப்பிடலாம் என்றால், அங்கும் காஸ் சிலிண்டர் பிரச்னையால், உணவு, சிற்றுண்டி கிடைக்கவில்லை.
இது வெறும் எம்.எல்.ஏ.,க்களின் பிரச்னை மட்டும் அல்ல. மக்களும் பாதிப்படைந்துள்ளனர். இந்த பிரச்னைக்கு. அரசு விரைவில் தீர்வு காண வேண்டும்.
மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: இதற்கு அரசே பதில் அளிக்க வேண்டும். 10 நிமிடம் அனுமதி அளிக்கிறேன். உறுப்பினர் சாப்பிட்டுவிட்டு வரட்டும்.
எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணா: அவர் (ஐவான் டிசோசா) பசியோடு சபைக்கு வந்துள்ளார். தயவு செய்து அவருக்கு இட்லி, வடை தாருங்கள்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான்: இட்லியும், வடையும் கிடைக்காது. ஏன் என்றால் காஸ் சிலிண்டர் இல்லை.
ஐவான் டிசோசா: காஸ் சிலிண்டர் விலையை அதிகரித்துள்ளனர். இது காஸ் டிரபிள் கதை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
