உரிகம் ரயில்வே மேம்பாலம் பணி: இடையூறாக இருந்த 20 வீடுகள் இடிப்பு
உரிகம் ரயில்வே மேம்பாலம் பணி: இடையூறாக இருந்த 20 வீடுகள் இடிப்பு
ADDED : செப் 22, 2026 08:56 PM

தங்கவயல்: தங்கவயலில், 40 ஆண்டு கோரிக்கையான உரிகம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, தங்கச் சுரங்க நிலத்தில் இடையூறாக இருந்த, 20 வீடுகள் இடிக்கப்பட்டன.
உரிகம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, தங்கச் சுரங்க நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்த வேண்டிய கட்டாயம், மாநில அரசுக்கு ஏற்பட்டது. இதற்காக, தங்கச் சுரங்க நிறுவனம் நிர்ணயித்த தொகையை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 2017லேயே கோலார் மாவட்ட கலெக்டர் செலுத்தினார்.
பணம் செலுத்தி 9 ஆண்டுகள் ஆகியும் பணிகள் நடக்கவில்லை. இது தொடர்பாக ரயில்வே துறை, தங்கச்சுரங்க நிறுவனம், கர்நாடக அரசு ஆகியவை பேச்சு நடத்தியது. மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த, நடப்பாண்டு ஆகஸ்டில் கோலார் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் நடவடிக்கை எடுத்தார்.
இதற்காக, 20 நாட்களுக்கு முன் அவர், தங்கவயல் தாசில்தார், தங்கச் சுரங்க அதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் உரிகம் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்ட வேண்டிய இடத்தில் ஆய்வு செய்தார்.
இதற்கு இடையூறாக உள்ள 20 வீடுகளை அகற்ற வேண்டும்; இதற்காக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கலெக்டர் ரவிகுமார் உத்தரவிட்டார்.
அதன்படி அங்குள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆயினும் சிலர், வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர்; இன்னும் சிலரோ, எங்களுக்கு நோட்டீஸ் வரவில்லை என்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 6:00 மணிக்கு கோலார் மாவட்ட உதவி கலெக்டர் ஜம்பகி ரேணுகா பிரசாத் திலிப், தாசில்தார் காயத்ரி, தங்கச் சுரங்க அதிகாரிகள், பொதுப்பணித் துறை பொறியாளர் ராஜசேகர், போலீஸ் டி.எஸ்.பி., லட்சுமி நாராயணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்தனர்.
இரண்டு பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து, கட்டடங்கள் இடிக்கும் பணிகள் நடந்தன. இதனால் சலசலப்பு நிலவியது. இப்பணிகள் முடிந்ததும், அதற்கான கடிதத்தை, ரயில்வே அதிகாரிகளிடம் நேற்று மாலை கோலார் மாவட்ட உதவி கலெக்டர் ஜம்பகி ரேணுகா பிரசாத் திலீப் ஒப்படைத்தார்.
