ADDED : செப் 22, 2026 08:55 PM

பெங்களூரு: 'அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் போது மரியாதையுடன் நடந்து கொள்வது உங்கள் கடமை' என்று கூறிய அமைச்சர் சிவலிங்கே கவுடாவின் தபால்தலையை, போலியாக பா.ஜ., வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது.
'அரசு அதிகாரிகளுக்கு, மக்கள் மரியாதையுடன் பணம் வழங்குவதில் தவறில்லை என கலால் துறை அமைச்சர் சிவலிங்கே கவுடா கூறியிருந்தார். இது, 'வெறும் வாயில் அவல்' கிடைத்த கதையாக மாறியது.
அமைச்சரின் பேச்சை கண்டித்துள்ள பா.ஜ., கவுரவ லஞ்சம் என்ற பெயரில் சிறப்பு தபால் தலை என்ற பெயரில், போலியாக தபால் தலையை வெளியிட்டுள்ளது.
கர்நாடக பா.ஜ., தனது 'எக்ஸ்' தளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
மாநிலத்தில் லஞ்சத்தை, 'மரியாதையுடன்' வழங்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை அமல்படுத்தி உள்ளது. அதுபோன்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசு சிறப்பு அஞ்சல் முத்திரையை வெளியிட்டு, லஞ்சத்தை ஊக்குவிக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
இது தொடர்பாக, லோக் ஆயுக்தாவில் அமைச்சர் சிவலிங்கே கவுடாவுக்கு எதிராக, மைசூரில் உள்ள மக்கள் குரல் அமைப்பு புகார் அளித்து உள்ளது.
