/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொடர் கஷ்டங்களை சந்தித்தவர்கள் தரிசிக்க வேண்டிய வன சித்தேஸ்வரர் தொடர்ந்து கஷ்டங்களா? தரிசிக்க வேண்டிய வன சித்தேஸ்வரர்
/
தொடர் கஷ்டங்களை சந்தித்தவர்கள் தரிசிக்க வேண்டிய வன சித்தேஸ்வரர் தொடர்ந்து கஷ்டங்களா? தரிசிக்க வேண்டிய வன சித்தேஸ்வரர்
தொடர் கஷ்டங்களை சந்தித்தவர்கள் தரிசிக்க வேண்டிய வன சித்தேஸ்வரர் தொடர்ந்து கஷ்டங்களா? தரிசிக்க வேண்டிய வன சித்தேஸ்வரர்
தொடர் கஷ்டங்களை சந்தித்தவர்கள் தரிசிக்க வேண்டிய வன சித்தேஸ்வரர் தொடர்ந்து கஷ்டங்களா? தரிசிக்க வேண்டிய வன சித்தேஸ்வரர்
ADDED : ஏப் 22, 2025 05:21 AM

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில், வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளம். இவற்றில் வன சித்தேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அமைந்துள்ளது.
பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகாவின் யல்லாரட்டி கிராமத்தின் வனப்பகுதியில் வன சித்தேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் புராதனமான கோவில். வனத்துக்குள் இருந்தாலும் இக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். ஆண்டுதோறும் கோலாகலமாக திருவிழா கொண்டாடப்படுகிறது.
சுயம்பு
முன்னொரு காலத்தில், யல்லாரட்டி பகுதி வெறும் காடாக இருந்தது. மரம், செடி, கொடிகள் நிறைந்திருந்தன. மக்கள் நடமாட்டமே கிடையாது. அப்போது ஒருநாள் வனத்தின் மத்தியில் சுயம்புவாக சித்தேஸ்வரர் சிலை தோன்றியது. இதை பார்த்து பக்தி பரவசமடைந்த மக்கள், பூஜைகள் செய்து வழிபட்டனர். ஆரம்பத்தில் சித்தேஸ்வரர் என அழைத்தனர். அதன்பின் சுற்றிலும் அடர்த்தியான வனம் உருவானதால், 'வன சித்தேஸ்வரர்' என, அழைக்க துவங்கினர்.
உத்தரகன்னடா மாவட்டங்களில், சித்தேஸ்வரா என்ற பெயரில் அழைக்கப்படும் பல கோவில்கள் உள்ளன. வன சித்தேஸ்வரர் கோவில் மிகவும் மகத்துவமானது.
பெலகாவி மாவட்டத்திலேயே மூன்று நாட்கள் பெரிய அளவில் திருவிழா நடக்கும் கோவில் என்ற பெருமை, இக்கோவிலுக்கு உண்டு. ஆண்டுதோறும் சிவராத்திரி பண்டிகை, ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
பெயர் சூட்டல்
சிறிய அளவில் இருந்த வன சித்தேஸ்வரர் கோவில், இன்று பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
கோவிலில் திருமணம், குழந்தைகளுக்கு பெயர் சூட்டல் என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சிகள் நடத்த தேவையான அனைத்து வசதிகளும் இங்குள்ளன.
வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களை சந்தித்து, மனம் நொந்தவர்கள் வன சித்தேஸ்வரரை தரிசனம் செய்தால், கஷ்டங்கள் நீங்கி, வாழ்க்கை வளமாகும் என்பது ஐதீகம்.
கோவிலின் மகிமையை கேள்விப்பட்டு, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பிரார்த்தனை செய்கின்றனர்.
வேண்டுதல் நிறைவேறிய பின் மீண்டும் கோவிலுக்கு வந்து, வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
- நமது நிருபர் -