ADDED : ஜூலை 23, 2025 08:43 AM

ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா மீது சுமத்தப்பட்ட, நான்கு பாலியல் வழக்கில், ஒன்றில் வரும் 30ல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், தேவகவுடா குடும்பத்தினர் திக்... திக்... மனநிலையில் உள்ளனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினர், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உடையவர்கள். தேவகவுடா, அவரது மகன்கள் குமாரசாமி, ரேவண்ணா ஆகியோர் அடிக்கடி கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களில் உள்ள கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வர். இவர்கள் குடும்பத்தில் சூறாவளி வீசியது போன்று அடுக்கடுக்காக சம்பவங்கள் நடந்தன.
சிறையிலடைப்பு பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டு உள்ளார்.
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட வீட்டு பணிப்பெண்ணை கடத்தியதாக, ரேவண்ணாவும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதே வழக்கில் இவரது மனைவி பவானி, நிபந்தனை முன்ஜாமின் பெற்றுள்ளார்.
மூத்த மகன் சூரஜ் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. சிறைக்கு சென்ற அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தன் மகன்கள் மீது பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளதால், எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த ரேவண்ணா, தற்போது மனசோர்வு அடைந்துள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்த நாள் முதல், கட்சி பணிகளில் அவ்வப்போது தலைகாட்டி வந்த ரேவண்ணா, பெரும்பாலும் கோவில்களுக்கு செல்ல துவங்கினார். அவரது மனைவி பவானிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளதால், ரேவண்ணாவுடன் செல்வதில்லை.
நான்கில் ஒன்று பிரஜ்வல் மீது பதிவான நான்கில், ஒரு வழக்கில் மட்டுமே ஜாமின் கிடைத்து உள்ளது. மீதமுள்ள மூன்று வழக்கிலும் விசாரணை நடந்து வருகிறது.
நான்கு வழக்குகளில், வீட்டு பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜூலை 30ல் தீர்ப்பு அளிக்கப்படும் என்று மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
மகனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், அதன் அடிப்படையில் மற்ற வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பை பெறலாம் என்று ரேவண்ணா கணக்கிட்டு உள்ளார். அதே வேளையில் பாதகமாக வந்தால், ரேவண்ணாவின் குடும்பத்தை மட்டுமல்ல, முன்னாள் பிரதமர் தேவகவுடா மீது மாநில மக்கள் வைத்துள்ள நன்மதிப்பும் குறையலாம்.
பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, பிரஜ்வல் அவசர அவசரமாக வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். இது, கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலும் நடந்து கொண்டிருந்ததால், கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, அவரை சரணடையும்படி வலியுறுத்தியதாக கூறப்பட்டது. இதையடுத்தே, பிரஜ்வல் பெங்களூரு திரும்பினார்.
அதேபோன்ற சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. ஜூலை 30ம் தேதியை எதிர்பார்த்து, திக்... திக்... மனநிலையில் ரேவண்ணா குடும்பத்தினர் உள்ளனர். இதேவேளையில், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள ரேவண்ணா, 'தன் மகன் பிரஜ்வல் விடுதலை ஆகும் வரை, அசைவ உணவுகளை சாப்பிட மாட்டேன்' என்று சபதம் எடுத்துள்ளார்.
- நமது நிருபர் -