சரணாலயத்தில் நீர் யானை தாக்கி கால்நடை டாக்டர் உயிரிழப்பு
சரணாலயத்தில் நீர் யானை தாக்கி கால்நடை டாக்டர் உயிரிழப்பு
ADDED : மார் 21, 2026 05:40 AM

ஷிவமொக்கா: வனவிலங்குகள் சரணாலயத்தில், நீர் யானை தாக்கியதில், இளம் கால்நடை டாக்டர் உயிரிழந்தார்.
ஷிவமொக்கா மாவட்டம் தாவரகொப்பாவில் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில், சமீபத்தில் தான், ஒப்பந்த அடிப்படையில் கால்நடை டாக்டர் சமிக்ஷா ரெட்டி, 27, என்பவர் நியமிக்கப்பட்டார்.
சரணாலயத்தில் உள்ள, 'சன்கானர்' என்ற கிளிக்கு, உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால், டாக்டர் சமீக்ஷா ரெட்டி, நேற்று முன் தினம் நள்ளிரவு, 11:45 மணியளவில், சரணாலயத்துக்கு சென்றிருந்தார். பறவையை பரிசோதித்த பின், கர்ப்பிணி நீர் யானையின் உடலின் வெப்ப நிலையை பரிசோதிக்க, அதன் வளாகத்துக்குள் சென்றார்.
பரிசோதிக்கும் போது, நீர் யானை சமீக்ஷாவை தாக்கியது. பலத்த காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தார். அவரது இறப்புக்கு, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் அளித்த பேட்டி:
நீர் யானை தாக்குதலில், இளம் பெண் டாக்டர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. இது, துரதிருஷ்டவசமான சம்பவம். அவரது குடும்பத்துடன் அரசு இருக்கும். அவரது குடும்பத்தினருக்கு, விதிமுறைப்படி நிவாரணம் வழங்கப்படும். இதுகுறித்து, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வனவிலங்குகள் சரணாலயத்தில், எந்த விலங்குகளுக்காவது சிகிச்சை அளிக்கும் போது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சம்பவம் குறித்து, மூத்த கால்நடை டாக்டர்கள், வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். ஏழு நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
