/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆன்மிகத்தை பாதுகாக்க பாடுபடும் கன்னடர்கள் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பாராட்டு
/
ஆன்மிகத்தை பாதுகாக்க பாடுபடும் கன்னடர்கள் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பாராட்டு
ஆன்மிகத்தை பாதுகாக்க பாடுபடும் கன்னடர்கள் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பாராட்டு
ஆன்மிகத்தை பாதுகாக்க பாடுபடும் கன்னடர்கள் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பாராட்டு
ADDED : நவ 10, 2025 04:24 AM

பெங்களூரு: ''கர்நாடகா முழுதுமே புனித ஸ்தலம் தான். கன்னடர்கள் கலாசாரம், பாரம்பரியம், ஆன்மிகத்தை பாதுகாக்க பாடுபடுகின்றனர்,'' என துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் பேசினார்.
நாட்டின் துணை ஜனாதிபதியான பின், முதன் முறையாக கர்நாடகாவுக்கு வந்த துணை ஜனாதிபதி ராதா கிருஷ்ணனுக்கு, பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்தில், கவர்னர் தாவர்சந்த் கெலாட், மத்திய அமைச்சர் குமாரசாமி, மாநில தலைமை செயலர் ஷாலினி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
பின், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூரு சென்றார். அங்கிருந்து, மாண்டியா மாவட்டம், மேலுகோட்டையில் உள்ள செலுவநாராயண சுவாமி கோவிலில், தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, ஹாசன் மாவட்டத்திற்கு சாந்தி சாகர் மஹாராஜ் ஸ்ரவணபெலகோலாவுக்கு வருகை தந்து 100 ஆண்டுகள் ஆவதை ஒட்டி நடந்த விழாவின் ஒரு பகுதியாக, நேற்று சாந்திசாகர் மஹாராஜாவின் 10 அடி உயர சிலையை, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
தியாகத்தின் அடையாளம் பின், அவர் பேசியதாவது:
சமண கலாசாரத்தின் அடையாளமாக விளங்கும் ஸ்ரவணபெலகோலா பகுதி, மதம், அமைதி, தியாகத்தின் அடையாளமாக திகழ்கிறது. இந்திய கலாசாரம், பாரம்பரியத்துக்கு சமண மதத்தின் பங்களிப்பு, மகத்தானது.
தமிழகத்துக்கும், சமண மதத்துக்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. சங்க காலத்தில் தமிழ் இலக்கியம், கலாசாரத்துக்கு இந்த மதம் அளித்த ஆழமான பங்களிப்புகளை, சிலப்பதிகாரம் போன்ற பாரம்பரிய படைப்புகள் பிரதிபலிக்கின்றன.
இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தில் ஒளிரும் ரத்தினமாக ஸ்ரவணபெலகோலா இருக்கும். கர்நாடகா முழுதுமே புனித ஸ்தலம் தான். கன்னடர்கள் கலாசாரம், பாரம்பரியம், ஆன்மிகத்தை பாதுகாக்க பாடுபடுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மைசூரு சென்ற அவர், ஜே.எஸ்.எஸ்., உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் 16வது பட்டமளிப்பு விழாவில் பேசியதாவது:
ஒவ்வொரு பட்டதாரியும் தங்கள் தனித்துவமான திறமைகளை அடையாளம் கண்டு, இலக்குகளை அமைக்க வேண்டும். இளம் பட்டதாரிகள், சுய ஒழுக்கத்தை பேண வேண்டும். தங்கள் பெற்றோருக்கு மரியாதை தந்து, அவர்களை கவனித்து கொள்ள வேண்டும்.
அறிவே உண்மையான செல்வம். பட்டதாரிகள் ஞானத்தின் ஒளியை எடுத்து செல்ல வேண்டும். எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கவும், 2047 விக்சித் பாரத்தின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப தேசத்தை கட்டி எழுப்புவதற்கு பணிவுடன், தீர்க்கமாக பங்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, சுத்துார் மடத்துக்கு சென்ற அவர், பின், சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி தேவியை தரிசனம் செய்தார்.

