/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோ 'போவி' ஆணைய தலைவருக்கு சிக்கல்
/
ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோ 'போவி' ஆணைய தலைவருக்கு சிக்கல்
ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோ 'போவி' ஆணைய தலைவருக்கு சிக்கல்
ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோ 'போவி' ஆணைய தலைவருக்கு சிக்கல்
ADDED : செப் 03, 2025 01:05 AM

பெங்களூரு, : நிலம் வழங்க பயனாளிகளிடம், 'போவி' மேம்பாட்டு ஆணைய தலைவர் லஞ்சம் கேட்ட வீடியோ பரவி வருகிறது. பதவியை ராஜினாமா செய்யும்படி, அவரை முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தி உள்ளார்.
கர்நாடக அரசின் சமூக நலத்துறைக்கு உட்பட்டது, 'போவி' மேம்பாட்டு ஆணையம். இந்த ஆணையம் எஸ்.சி., சமூகத்தினரை தொழில் முனைவோர்களாக மாற்றுவது; விவசாயிகளுக்கு நிலம் வழங்குவது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை செய்கிறது. ஆணையத்தின் தலைவராக ரவிகுமார் இருந்து வருகிறார்.
நிலம் கேட்டு வந்த தகுதியான பயனாளிகளிடம், ரவிகுமார் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட வீடியோ பரவி வருகிறது. 'ரவிகுமாரை கைது செய்ய வேண்டும்' என, 'போவி' மேம்பாட்டு சமூகத்தின் தலைவரும், பா.ஜ., பிரமுகரான வெங்கடேஷ் மவுரியா வலியுறுத்தி உள்ளார்.
இந்த விவகாரம் சூடுபிடித்ததை அடுத்து, '60 சதவீத கமிஷன் அரசு' என, பா.ஜ., தலைவர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
“முதலில், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு செய்தனர்; எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 11,000 கோடி ரூபாயை, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தினர்; எஸ்.சி., மக்கள் கழுத்தில், காங்கிரஸ் அரசு தொடர்ந்து கத்தியை வைக்கிறது,” என, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி விமர்சித்தார்.
வீடியோவில், 'பணத்தை அமைச்சருக்கு கொடுக்க வேண்டும்' என்றும் ரவிகுமார் கூறி இருந்தார். ஆனால் எந்த அமைச்சர் என்று சொல்லவில்லை.
ஆனாலும், 'முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளரான, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பாவுக்கு பணம் கொடுக்க தான், ரவிகுமார் வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்' என்றும், பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த வீடியோவால் சித்தராமையா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பதவியை ராஜினாமா செய்யும்படி ரவிகுமாருக்கு, முதல்வர் சித்தராமையா அலுவலகத்தில் இருந்து உத்தரவு பறந்தது.
பா.ஜ., ஆட்சியிலும் 'போவி' மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுபற்றி சி.ஐ.டி., விசாரணைக்கு சித்தராமையா அரசு உத்தரவிட்டது. விசாரணையின்போது, பெண் அதிகாரி கனகலட்சுமி துன்புறுத்தியதால், வக்கீல் ஜீவா என்பவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.