ADDED : ஜூன் 02, 2025 01:45 AM

பெங்களூரு : விதான் சவுதாவை சுற்றி பார்க்கும், சுற்றுலா திட்டம் நேற்று முதல் துவங்கியது.
கர்நாடக அரசின் அதிகார மையமாக பெங்களூரு விதான் சவுதா உள்ளது. ஒருமுறையாவது விதான் சவுதாவை உள்ளே சென்று பார்க்க மாட்டோமா என்று மக்கள் ஏங்குவர்.
இதனை புரிந்து கொண்ட அரசு, மக்கள் ஏக்கத்தை போக்கும் வகையில் விதான் சவுதாவை சுற்றி பார்க்கும் வகையில் 'மார்கதர்ஷி பரசவா' என்ற பெயரில் திட்டத்தை துவங்கியது. ஜூன் 1ம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள், மாதத்தில் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் விதான் சவுதாவை மக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று திட்டம் துவங்கியது. முதல் நாளிலேயே விதான் சவுதாவை சுற்றி பார்க்க ஏராளமான மக்கள் வந்தனர். தங்கள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சி அனைவரின் முகத்திலும் தெரிந்தது. விதான் சவுதாவில் உற்சாகமாக புகைப்படம் எடுத்து கொண்டனர். விதான் சவுதா குறித்து மக்களுக்கு விளக்க 10 சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர். குறிப்பிட்ட நாட்களில் 300 பேர் 10 குழுக்களாக பிரிந்து சென்று விதான் சவுதாவை பார்வையிடலாம்.
ஒரு வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள், மாணவர்களுக்கு அனுமதி இலவசம்.
15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தலா 50 ரூபாய் கட்டணம். காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பார்வையிட அனுமதி உண்டு. https://kstdc.co/activities என்ற இணைய முகவரியில் சென்று டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.