விதான் சவுதா பாதுகாப்பு பிரிவு டி.சி.பி.,யை திட்டிய சித்தராமையா
விதான் சவுதா பாதுகாப்பு பிரிவு டி.சி.பி.,யை திட்டிய சித்தராமையா
ADDED : செப் 23, 2026 02:44 AM

பெங்களூரு: தனது அரசு காரை நுழைவு வாயில் படிக்கட்டு அருகே நிறுத்த அனுமதிக்காததால், விதான் சவுதா பாதுகாப்பு பிரிவு டி.சி.பி.,யை, முன்னாள் முதல்வர் சித்தராமையா திட்டினார்.
கர்நாடக சட்டசபையின் சிறப்பு விவாதத்தில், முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று பங்கேற்றார். மதிய உணவு இடைவேளைக்கு வீட்டிற்கு செல்வதற்காக, விதான் சவுதாவின் மேற்கு நுழைவுவாயில் பகுதிக்கு அவர் வந்தார்.
அவரது அரசு கார் அங்கு இல்லை. டிரைவரை போனில் அழைத்த போது, 'விதான் சவுதா பாதுகாப்பு பிரிவு டி.சி.பி., யோகேஷ், காரை நுழைவுவாயில் படிக்கட்டு அருகே நிறுத்த அனுமதிக்கவில்லை. வாகன நிறுத்துமிடத்தில் கார் நிற்கிறது; எடுத்து வருகிறேன்' என்று கூறினார்.
இதை கேட்டு சித்தராமையா கடும் கோபம் அடைந்தார். நுழைவு வாயில் படிக்கட்டு பகுதியில் காத்து நின்றார். கார் வந்ததும் ஏறினார். அப்போது டி.சி.பி., யோகேஷை அழைத்து, 'என் காரை ஏன் இங்கிருந்து அகற்றினீர்கள். யார் உங்களிடம் கூறியது'. உங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. விதான் சவுதாவுக்கு வரும் மக்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் சரியாக வழிநடத்துவது இல்லை என எனக்கு தொடர்ச்சியான புகார்கள் வந்துள்ளன. இனிமேல் கவனமுடன் செயல்படுங்கள்' என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
டி.சி.பி.,யை, சித்தராமையா திட்டியதால் விதான் சவுதா நுழைவு வாயில் பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
