எத்னாலுக்கு கிடைக்கும் வரவேற்பால் விஜயேந்திரா விரக்தி
எத்னாலுக்கு கிடைக்கும் வரவேற்பால் விஜயேந்திரா விரக்தி
ADDED : ஏப் 08, 2026 04:33 AM

கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, மாநில பா.ஜ., தலைவராக இருக்கிறார். இவர் தன் தந்தை மூலமாக, இளம் வயதிலேயே தலைவர் பதவியை பிடித்தார். இது, கட்சிக்குள் இருக்கும் சீனியர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியது. இதனால், உட்கட்சி பூசலும் துவங்கியது.
அந்த உட்கட்சி பூசலை விஜயபுரா தொகுதி எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் உலகறிய செய்தார். பொதுவெளியில் எடியூரப்பா, விஜயேந்திரா மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால், அவர் கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனாலும் , தனக்கென்று ஒரு கொள்கை, தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு, 'மாஸ்' காட்டி வருகிறார். இவருக்கு ஹிந்துத்துவா கொள்கை மீது அதிகமான ஈர்ப்பு உள்ளது.
இதை இவரது பேச்சுக்களும் வெளிப்படுத்துகின்றன. அதனால், விஜயபுரா தவிர்த்து, வடகர்நாடகாவிலும் எத்னா லுக்கு மவுசு இருக்கிறது. இதனாலே, இவர் போகும் இடங்களில் கூட்டம் சேர்கிறது. இது, விஜயேந்தி ராவுக்கு துளியும் பிடிக்கவில்லை.
மேலும், பா.ஜ.,வில் உள்ள மூத்த எம்.எல்.ஏ.,க்களுடனும் எத்னால் நெருங்கி பழகுகிறார். இதையெல்லாம், விஜயேந்திரா கவனித்து கொண்டே தான் இருக்கிறார். இருப்பினும், எத்னாலின் புகழ், அவருக்கு பின்னால் வரும் கூட்டத்தை அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
குறிப்பாக, தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் பாகல்கோட் பா.ஜ., வேட்பாளர் வீரண்ணா சரந்திமத்தை ஆதரித்து கடந்த மூன்று நாட்க ளாக எத்னால் பிரசாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்தில் அவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது; கூட்டமும் கூடியது. ஹிந்து அமைப்பினரின் அமோக வரவேற்பும் கிடைத்தது. இது, விஜயேந்திராவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
பிரசாரத்தின் போது யாருக்கும் கூட்டம் வருவது இயல்பே. எத்னாலுக்கு அரசியல் அனுபவம் இருக்கிறது. அவர் மற்றவர்கள் பேச்சை கேட்டு நடந்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டாம் என, நான் மேலிடத்திடம் கூறினேன். அதனாலே, அவர் கட்சியில் சிறிது காலம் இருந்தார். இல்லையெனில் எப்போதே கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார். அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது மேலிடத்தின் கையில் தான் இருக்கிறது.
இ வ்வாறு அவர் கூறினார்.
இவரது வார்த்தைகள் எத்னால் மீதிருந்த வன்மத்தை வெளி க்காட்டின. இதற்கு சுட சுட எத்னால் அளித்த பதில்:
எடியூரப்பா தன் மூளையை பயன்படுத்தி இருந்தால், ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றிருக்க மாட்டார்.
அவர் தன் மகன் விஜயேந்திராவின் பேச்சை கேட்டு நடந்ததாலே சிறைக்கு சென்றார். அப்பாவை சிறைக்கு தள்ளிய பெருமை விஜயேந்திராவையே சேரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -:
