ஒரே நாளில் இருவரை தாக்கிய சிறுத்தையால் கிராமத்தினர் அச்சம்
ஒரே நாளில் இருவரை தாக்கிய சிறுத்தையால் கிராமத்தினர் அச்சம்
ADDED : மார் 23, 2026 01:41 AM
ஷிவமொக்கா: ஷிவமொக்காவில் ஒரே நாளில் இருவரை சிறுத்தை தாக்கியதால், இரு கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஷிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுரா தாலுகாவின் தடசனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மிருதுஞ்செயா, 38. நேற்று முன்தினம் காலையில் தனது தோட்டத்தில் உள்ள குடிநீர் குழாயை பழுது பார்த்து கொண்டிருந்தார்.
பணி முடிந்து எழும் போது, பின்னால் இருந்து வந்த சிறுத்தை ஒன்று, அவர் மீது பாய்ந்தது. அதிர்ச்சியடைந்த அவரின் கழுத்தை சிறுத்தை கவ்வ முயற்சித்தது.
அப்போது அவர், சிறுத்தையின் வாயை பிடித்து, தனது தோளில் மாட்டியிருந்த துண்டை சிறுத்தையின் கழுத்தில் கட்டி, சிறுத்தையை சுற்றி துாக்கி வீசினார். இதனால் சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது.
இந்த நேரத்தில், மிருதுஞ்செயாவின் இடது கை, கால், இடுப்பில் காயம் ஏற்பட்டது. தனது இரு சக்கர வாகனத்தில் காயத்துடன் பைக்கில் வந்த அவரை நிறுத்தி, கிராமத்தினர் சிர்லகொப்பா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மெக்கான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மிருதுஞ்செயா கூறுகையில், ''எனது தோட்டத்தில் தண்ணீர் குழாயை சரி செய்து கொண்டிருந்தேன். அப்போது சிறுத்தை என்னை தாக்கியது. அதன் பிடியில் இருந்து தப்பித்தேன். இப்போது தான் முதன் முறையாக எங்கள் கிராமத்தில் சிறுத்தையை பார்க்கிறேன். மலையில் ஏற்பட்ட தீ விபத்தால், சிறுத்தைகள் சுற்றித்திரிகின்றன என நினைக்கிறேன். என்னை தாக்கிய சிறுத்தை பெரிதாக இருந்தது. வனத்துறையினர் எங்கள் கிராமத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்,'' என்றார்.
அதுபோன்று, அன்று மாலை அடகன்டி கிராமத்தை சுதீப், 24, என்பவரையும் சிறுத்தை தாக்கி உள்ளது. சிறுத்தையின் பிடியில் இருந்து தப்பிய அவர், சிர்லகொப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மெக்கான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இத னால், அக்கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
