UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 08:00 PM
கொப்பால்: கனககிரியின் மயானத்தில், தலித் சமுதாயத்தை சேர்ந்த ஐந்து பேரின் படங்களை வைத்து, மாந்த்ரீகம் செய்யப்பட்டதால் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொப்பால் மாவட்டம், கனககிரி தாலுகாவின் கலிகேரி கிராமத்தின் மயானத்தில், தீபாவளி அமாவாசை நாளன்று இரவு, இதே கிராமத்தின் தலித் சமுதாயத்தை சேர்ந்த, ஐந்து நபர்களுக்கு எதிராக, மர்ம கும்பல் மாந்த்ரீகம் செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இவர்களின் படங்கள் மீது, டிராக்டர் மற்றும் பைக்குகளின் படங்களை வைத்துள்ளனர். கருப்பு துணியால் பொம்மை செய்துள்ளனர். எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உட்பட பல பொருட்களை வைத்து மாந்த்ரீகம் செய்யப்பட்டுள்ளது.
பண் டிகை நாள் என்பதால், இப்பகுதிக்கு யாரும் வரவில்லை. எனவே யாருக்கும் தெரியவில்லை. ஆடு மேய்ப்பவர்கள், நேற்று முன்தினம், இங்கு வந்தபோது, இதை கவனித்து உடனடியாக கிராமத்தினருக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியின் முக்கிய பிரமுகர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து, மாந்த்ரீகம் செய்திருப்பதை தெரிந்து கொண்டனர். போலீசாருக்கும் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். மாந்த்ரீகம் செய்தவர்களை தேடுகின்றனர். இச்சம்பவத்தால், கிராமத்தினர் கலக்கத்தில் உள்ளனர். மாலை நேரத்தில், வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர். சிறு குழந்தைகளை வெளியே விடுவதில்லை.
‘மாந்த்ரீகம் என்பது பொய்யானது. ஒருவரின் வளர்ச்சியை கண்டு பொறாமையால், சிலர் இது போன்று செய்துள்ளனர். இதை யாரும் பொருட்படுத்த வேண்டாம்’ என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
