/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீடுகளில் பள்ளம் கிராமத்தினர் கிலி
/
வீடுகளில் பள்ளம் கிராமத்தினர் கிலி
ADDED : நவ 28, 2025 05:35 AM

ராய்ச்சூர்: சிந்தனுாரின் யத்தலதொட்டி கிராமத்தின் பல வீடுகளில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால் மக்கள் கிலி அடைந்துள்ளனர்.
ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுார் தாலுகாவில் யத்தலதொட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் பல வீடுகளுக்குள், நிலத்தில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரே மாதத்தில் ஐந்து வீடுகளில் பள்ளங்கள் காணப்பட்டன. வீட்டுக்குள்ளேயே மண் சரிவு ஏற்படுவதால், கிராமத்தினர் பயத்துடன் வாழ்கின்றனர்.
யத்தலதொட்டி கிராமம், தாழ்வான பகுதியில் உள்ளது. கிராமத்தை சுற்றிலும் நீர்ப்பாசன பகுதிகள் உள்ளன. தண்ணீரின் ஈரப்பதம் பரவுவதால், வீடுகளில் மண் சரிந்து பள்ளங்கள் ஏற்படுவதாக, கிராமத்தினர் கூறுகின்றனர். ராஜசேகர ரெட்டி, குரப்பா மூடலகிரி, கரிபசப்பா, ரமேஷ், சென்னபசவா ஆகியோரின் வீடுகளில் மண் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் அபாயம் ஏற்படவில்லை.
ஒரு வீட்டில் பள்ளம் ஏற்பட்டு, அதில் ஒரு பெண் விழுந்தார். குடும்பத்தினர் அவரை மேலே துாக்கி காப்பாற்றினர். பள்ளங்களை மூடிவிட்டு, அதே வீடுகளில் வசிக்கின்றனர். ஆனால் அடுத்து எங்கு பள்ளம் ஏற்படுமோ என்ற பீதியுடன், வீட்டில் உள்ளனர். தகவலறிந்த தாலுகா நிர்வாகம், நில ஆய்வியல் விஞ்ஞானிகள் குழுவை அழைத்து வந்து, பள்ளம் ஏற்பட்ட வீடுகளில் ஆய்வு செய்ய முன் வந்துள்ளது.

