/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோழிப்பண்ணையால் துர்நாற்றம் கோழி, முட்டைகளை அள்ளிய கிராமத்தினர்
/
கோழிப்பண்ணையால் துர்நாற்றம் கோழி, முட்டைகளை அள்ளிய கிராமத்தினர்
கோழிப்பண்ணையால் துர்நாற்றம் கோழி, முட்டைகளை அள்ளிய கிராமத்தினர்
கோழிப்பண்ணையால் துர்நாற்றம் கோழி, முட்டைகளை அள்ளிய கிராமத்தினர்
ADDED : டிச 26, 2025 06:48 AM

கதக்: கதக்கில், 15 ஆண்டுகளாக துர்நாற்றத்தை ஏற்படுத்தி வந்த கோழிபண்ணைக்குள் நுழைந்த கிராம மக்கள், பண்ணையில் இருந்த ஆயிரக்கணக்கான கோழிகள் மற்றும் முட்டைகளை அள்ளிச் சென்றனர்.
கதக் மாவட்டம் உனச்சேரி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து, 30 மீட்டர் தொலைவில், மேக்ராஜ் என்பவரின் கோழிப்பண்ணை, 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இப்பண்ணையில் இருந்து வரும் துர்நாற்றத்தால், கிராமத்தினர் அவதிப்பட்டு வந்தனர். பலமான காற்று அடித்தால், துர்நாற்றத்தின் தாக்கம் மிக மோசமாக இருக்கும்.
அதனால், கோழி பண்ணையை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கோபம் அடைந்த கிராமத்தினர், நேற்று காலை பண்ணைக்குள் புகுந்தனர். இதை பார்த்த பண்ணை உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், கிராமத்தினரை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால், அவர்களை மீறி பண்ணையில் கோழிகள் உள்ள பகுதிக்குள் புகுந்த கிராம மக்கள், கோழிகள், முட்டைகளை அள்ளிச் சென்றனர்.
அவர்களை தடுக்க முடியாமல் போலீசாரும், உரிமையாளரும் திணறினர். சில நிமிடங்களில் பண்ணையில் இருந்த அனைத்து கோழிகளும், முட்டைகளையும் காணாமல் போயின.

