/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விஷ்ணுவர்த்தன் சமாதி இடிப்பு: ரசிகர்கள் கொந்தளிப்பு
/
விஷ்ணுவர்த்தன் சமாதி இடிப்பு: ரசிகர்கள் கொந்தளிப்பு
விஷ்ணுவர்த்தன் சமாதி இடிப்பு: ரசிகர்கள் கொந்தளிப்பு
விஷ்ணுவர்த்தன் சமாதி இடிப்பு: ரசிகர்கள் கொந்தளிப்பு
ADDED : ஆக 09, 2025 04:55 AM

பெங்களூரு: பெங்களூரின், உத்தரஹள்ளி - கெங்கேரி சாலையில் உள்ள, நடிகர் விஷ்ணுவர்த்தனின் சமாதி இடிக்கப்பட்டதை கண்டித்து, அவரது ரசிகர்கள் நேற்று மதியம் போராட்டம் நடத்தினர்.
கன்னட திரையுலகின் பிரபல நடிகராக திகழ்ந்தவர் விஷ்ணுவர்த்தன். இவர் பல வெற்றி படங்களை கொடுத்தவர். லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 2009ல் இவர் காலமானார்.
சிறிய கோபுரம் இவருக்கு பெங்களூரின் உத்தரஹள்ளி - கெங்கேரி சாலையில் உள்ள அபிமான் ஸ்டுடியோவில் இறுதிச் சடங்குகள் நடந்தன. அங்கு அவருக்கு சமாதி எழுப்பப்பட்டது.
அந்த இடத்தில் சிறிய கோபுரம் இருந்தது. இதே இடத்தில் அவருக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என, ரசிகர்கள் வலியுறுத்தினர்.
சமாதி இருந்த இடம், மூத்த நடிகர் பாலண்ணாவுக்கு சொந்தமானது. சமாதி இடத்தை விட்டுத்தர அவரது குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.
இதுகுறித்து, நீதிமன்றத்தை நாடினர். அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளும்படி, விஷ்ணுவர்த்தனின் ரசிகர்கள் மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன்பு, நீதிமன்றத்தில் பாலண்ணா குடும்பத்தினருக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. அதன்பின் சமாதியை அகற்ற பாலண்ணா குடும்பத்தினர் முயற்சித்தனர்.
இதற்கிடையே மைசூரில், விஷ்ணுவர்த்தனுக்கு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி, பாலண்ணா குடும்பத்தினர், இரவோடு, இரவாக சமாதியை இடித்து தரைமட்டமாக்கினர்.
இதனால் வெகுண்டெழுந்த ரசிகர்கள், அபிமான் ஸ்டுடியோ முன், நேற்று மதியம் போராட்டம் நடத்தினர்.
சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை கைது செய்து, விடுவித்தனர். முன்னெச்சரிக்கையாக அந்த இடத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் உறுதி இதுகுறித்து, விஷ்ணுசேனா கமட்டி தலைவர் வீரகபுத்ரா சீனிவாஸ் கூறியதாவது:
அபிமான் ஸ்டுடியோவில் இருந்த நடிகர் விஷ்ணு வர்த்தன் சமாதி இடத்தை தக்கவைக்க வேண்டும் என, முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவரும் எங்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
இதுகுறித்து, திரைப்பட வர்த்தக சபைக்கு குழுவினரை அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தோம். ஆனால் அதற்குள் பாலண்ணா குடும்பத்தினர், இரவோடு இரவாக சமாதியை இடித்துத் தள்ளியுள்ளனர்.
ஆனால் ரசிகர்கள் சேர்ந்து, பெங்களூரில் விஷ்ணு வர்த்தனுக்கு, நினைவிடம் கட்டியே தீருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

