ADDED : மே 07, 2026 11:28 PM

மைசூரு: ''இனி எந்த தேர்தலிலும் போட்டியிடப்போவது இல்லை,'' என, பா.ஜ., -எம்.எல்.சி., விஸ்வநாத் அறிவித்துள்ளார்.
மைசூரில் அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில் அடுத்து வரும் எந்த தேர்தலிலும் போட்டியிட வேண்டாம் என, நான் முடிவு செய்துள்ளேன். என் நீண்ட அரசியலுக்கு, முற்றுப்புள்ளி வைக்கிறேன். தேர்தலில் போட்டியிட மாட்டேனே தவிர, அரசியலில் நீடிப்பேன். நான் மட்டுமின்றி, என் பிள்ளைகளும் கூட, தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.
நான் பல முறை தேர்தலில் களமிறங்கிய போது, மக்களே எனக்கு பணம் கொடுத்து ஆசி கூறினர். ஆனால் இப்போது மக்களுக்கு பணம் கொடுத்து, தேர்தலை சந்திக்கும் சூழ்நிலை உள்ளது. 50 கோடி ரூபாய் செலவிட்டு, தேர்தலில் போட்டியிட எனக்கு சக்தியில்லை.
முன்னாள் முதல்வர் எடியூப்பா, அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 'அபிமானோற்சவம்' நடத்துவதாக, தகவல் வெளியாகியுள்ளது. எடியூரப்பா போக்சோ வழக்கில், விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இச்சூழ்நிலையில், அவருக்கு அபிமானோற்சவம் கொண்டாடுவது சரியா?
அவர் மீதான போக்சோ வழக்கு மற்றும் இந்த நேரத்தில் நடத்தும் அபிமானோற்சவம் என, இரண்டும் மாநிலத்தின் கவுரவத்துக்கு கரும்புள்ளியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
