/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கபிலா ஆற்றை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்
/
கபிலா ஆற்றை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்
ADDED : டிச 16, 2025 05:22 AM

மைசூரு: நஞ்சன்கூடின் கபிலா ஆற்றில் தேங்கியிருந்த கழிவுகளை, பல்வேறு நல அமைப்பினர் ஒன்றாக இணைந்து சுத்தம் செய்து, ஆறு லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா கோவிலுக்கு வரும் பக்தர்கள், அருகில் உள்ள கபிலா ஆற்றில் புனித நீராடுவர்.
நீராடியபின், ஆடைகளை அங்கேயே விட்டு செல்வது, தர்ப்பணம் செய்பவர்கள், பூஜை பொருட்களை தண்ணீரில் விட்டு செல்வதால், கரையில் வண்டல் மண், கழிவுகள், ஆடைகள் தேங்கியிருந்தன. அடுத்தடுத்து இங்கு குளிக்க வரும் பக்தர்கள், இதனை பார்த்து குளிக்காமல், தண்ணீரை தலையில் தெளித்து கொண்டு சென்று விடுகின்றனர்.
இந்நிலையில், 'யுவ பிரிகேட்' என்ற அமைப்பு, பல மக்கள் நல பணிகளை செய்து வருகின்றன. கபிலா ஆற்றில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக வலைதளத்தில் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதை ஏற்று, நேற்று முன்தினம் காலையில் ஸ்ரீகண்டேஸ்வரா படகு சங்கம், தர்மஸ்தலா தன்னார்வலர்கள், மைசூரு என்.ஐ.இ., கல்லுாரி மாணவ - மாணவியர், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், கெம்பே கவுடா லே - அவுட் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குவிந்தனர்.
கபிலா ஆற்றில் இருந்த கழிவுகளை படிப்படியாக அகற்றி, ஆறு லாரிகளில் நிரப்பினர். அத்துடன், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், புனித நீரின் மகிமையை புரிந்து கொள்ளும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவர்களின் பணிக்காக, நஞ்சன்கூடு நகராட்சி சார்பில் டிரக் லாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் இவர்களுக்கு உணவும், கோவில் பிரசாதமும் வழங்கப்பட்டது.

