ADDED : ஜூலை 30, 2025 07:47 AM

பெங்களூரு : “ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய வார்டு மறுவரையறைப் பணி, ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கும்,” என, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த எடுக்கப்பட்டுள்ள, நடவடிக்கை குறித்து விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அடுத்த விசாரணை 4ம் தேதி நடக்க உள்ளது.
இந்நிலையில் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ், வார்டு மறுவரையறை, எல்லை நிர்ணயம் செய்வது தொடர்பாக, துணை முதல்வர் சிவகுமார், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் வார்டு மறுவரையறை, எல்லை நிர்ணயம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.
வார்டுகள், எல்லை நிர்ணயம் செய்யும் பணி அடுத்த மாதம் 3ம் தேதி துவங்கி, செப்டம்பர் 1ம் தேதி வரை நடக்கும்.
அனைத்து செயல்முறைகளும் முடிந்தவுடன், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வோம். மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த நாங்கள் தயாராகி விடுவோம்.
ஹெப்பால் மேம்பாலம் சந்திப்பு, சிவானந்தா சதுக்க சந்திப்பு, காந்தி பஜார் அருகே பல மாடி வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை, ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் திறக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு.
தெருவோர வியாபாரிகள் 3,700 பேருக்கு தள்ளுவண்டி வழங்க உள்ளோம்.
கிரேட்டர் பெங்களூருக்கு சட்டசபையில் ஒப்புதல் தெரிவித்துவிட்டு, இப்போது அரசியல்ரீதியாக பா.ஜ., எதிர்ப்பது சரியல்ல.
விதான் சவுதாவை டில்லிக்கு மாற்ற வேண்டும் என்று, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறி இருப்பது, ஐயோ பாவம் என்று அவரை பார்த்து சொல்ல தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.