ADDED : ஜூலை 21, 2026 09:55 PM
பெங்களூரு: 'அவசர உதவி எண் 112க்கு அழைப்பு வந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல வேண்டுமே தவிர, தங்கள் எல்லைக்குள் வரவில்லை என்று தட்டிக்கழிக்க கூடாது' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
திருட்டு, வழிப்பறி உட்பட பிற குற்றச்சம்பவங்கள் தொடர்பாக போலீசாருக்கு அழைப்பு விடுத்தால், 'சம்பவம் நடந்த பகுதி எங்கள் எல்லைக்குள் வரவில்லை. அப்பகுதி போலீசாரிடம் புகார் அளியுங்கள்' என்று போலீசார் தெரிவிப்பதாக பல புகார்கள் வருகின்றன.
பொது மக்களின் விமர்சனத்துக்கு ஆளானது மட்டுமின்றி, போலீசாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில், நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
அவசர உதவி எண் - 112க்கு உதவி அழைப்பு வரும் போதெல்லாம், எந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிக்குள் வருகிறது என்பதை தீர்மானிக்காமல், அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து, சம்பவ இடத்துக்கு ஆறரை நிமிடங்களுக்குள் சென்றடைய வேண்டும்.
எனவே, அதிகார வரம்பு தொடர்பான நடைமுறையை சரி செய்வதற்கு முன், உயிர்களை காப்பாற்றுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.
கடமையில் இருந்து தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆறு மாதங்களில், அவசர கால சூழ்நிலைகளின் போது, 74 பேரை போலீசார் மீட்டுள்ளனர். வீட்டில் இருந்து காணாமல் போன, 700 பேரை கண்டுபிடித்து, அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் தற்கொலைக்கு முயன்ற, 60 பேர் சரியான நேரத்தில் மீட்கப்பட்டு உள்ளனர்.
குற்றம் செய்வோரை விரைந்து பிடிக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம், போலீஸ் நிலைய எல்லைக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது, 181 பெரியவர், 211 குழந்தைகளை மீட்டுள்ளனர்.
இது தவிர, செயற்கை நுண்ணறிவு மூலம் அவசர உதவி எண் - 112க்கு, தமிழ், கன்னடம் உட்பட, 12 மொழிகளில் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
