/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுத்தை சடலம் மீட்பு விஷம் வைத்து கொலை?
/
சிறுத்தை சடலம் மீட்பு விஷம் வைத்து கொலை?
ADDED : ஜூலை 11, 2025 11:00 PM

சாம்ராஜ்நகர்: இறந்து, பல நாட்கள் ஆன சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதா என வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
சாம்ராஜ்நகர் மலைப்பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு ஐந்து புலிகள், 18 குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் நேற்று கொத்தலவாடி அருகே உள்ள கல் குவாரியில் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதை அறிந்த மாவட்ட வன அலுவலர் ஸ்ரீபதி, சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார். ஆய்வில், ஐந்து வயதுள்ள ஆண் சிறுத்தை இறந்து, பல நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிந்தது. சிறுத்தை இறந்த இடத்திலிருந்து சிறிது துாத்தில் நாய், கன்றுக்குட்டி ஒன்று இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.
சிறுத்தை, நாய், கன்றுக்குட்டி ஆகியவற்றின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர். இச்சோதனையில், சிறுத்தை விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதா என்பது தெரிய வரும்.
மாவட்ட வன அலுவலர் ஸ்ரீபதி கூறுகையில், ''முதற்கட்ட ஆய்வில் சிறுத்தை விஷம் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது,'' என்றார்.