சிக்கமகளூரு அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
சிக்கமகளூரு அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
ADDED : ஜூன் 10, 2026 10:47 PM

- நமது நிருபர் -:
கர்நாடகாவில், சில தினங்களுக்கு முன் வரை, கோடை வெயில் வாட்டி வதைத்தது. தற்போது தென்மேற்கு பருவமழை துவங்க இருப்பதால், பருவ மழைக்கு முந்தைய மழை பரவலாக பெய்கிறது.
குறிப்பாக, மலை நாடு மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் சிக்கமகளூரு, ஷிவமொக்கா, குடகு, வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டன. குறிப்பாக, சிக்கமகளூரில் உள்ள அருவிகளில் தண்ணீர் விழாததால், பாறைகள் மட்டுமே தெரிந்தன.
தற்போது பெய்து வரும் மழையால், அருவிகளில் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. ஒன்னமா தேவி, ஜெர்ரி, கல்லத்தி, ஹெப்பே, ஹனுமன குந்தி, மாணிக்யதாரா, ஹனுமன் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. அதிலும் ஹெப்பே அருவியில், 550 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது.
பசுமையின் மடி போர்த்திய இடங்களான பாபாபுடன்கிரி, முல்லையனங்கிரி மலையிலும், கோடை வெயிலின் தாக்கத்தால் பசுமை புற்களை பார்க்க முடியாமல் இருந்தது. தற்போது அந்த பகுதி களிலும் பசுமை மலர ஆரம்பித்துள்ளது.
இதனால், சிக்கமகளூருக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கிறது. வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகரிக்கலாம் என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன.
